தேர்தல்: வன்முறையை தூண்ட அதிமுக- சமூகவிரோதிகள் கூட்டு சதி- நெடுமாறன் புகார்
சேலம்:
தேர்தலின்போது வன்முறை வெறியாட்டம் போட சமூக விரோதிகளுடன் அதிமுகவினர் பேசி வருவதாகவும், இதைத் தடுக்க தமிழகத்தில் ராணுவத்தைக் குவிக்க வேண்டும் என்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பிரதமர் வாஜ்பாயின் பேச்சில் கடந்த சில நாட்களாக தடுமாற்றமும் குழப்பமும் வெளிப்படையாகத் தெரிகிறது. கூட்டணி ஆட்சி சலித்துவிட்டதாகவும், பா.ஜ.கவில் தனக்கு அடுத்த வாரிசு உருவாகிவிட்டதாகவும் பேசுகிறார்.
அவர் விரும்பாத விஷயங்கள் அவரது கட்சியில் செயல்படுத்தப்பட்டு வருவதை அவரால் ஏற்க முடியவில்லை, அதை கண்டிக்கவும் முடியவில்லை. தனது தொகுதியில் ஏழைப் பெண்கள் 22 பேர் இலவச சேலைக்காக முண்டியடித்து நெரிசலில் சிக்கி இறந்தது அவருக்கு அதிர்ச்சி அளித்திருக்க வேண்டும்.
அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று தேர்தல் போட்டியில் இருந்து வாஜ்பாய் விலகிக் கொள்ள வேண்டும்.
பொடா மறு ஆய்வுக் குழுவின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அரசுகள் அதற்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதை மீறுவது நீதிமன்ற அவமதிப்பாகும்.
ஆனால், தமிழக அரசு மறு ஆய்வுக் குழுவின் தீர்ப்பை மதிக்கவில்லை. இதற்காக நீதிமன்ற அவமதிப்பில் முதல்வர் ஜெயலலிதா சிக்க மாட்டார். தலைமைச் செயலாளர் தான் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும்.
இதையடுத்து அதிகாரிகளை மாற்றிவிட்டு ஜெயலலிதா தப்ப முயல்வார். இந்தப் பிரச்சனையை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு நானும் நெடுமாறனும் கொண்டு செல்வோம்.
தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது வன்முறை, வெறியாட்டம் அதிகமாக இருக்கும். இதற்காக மாநிலம் முழுவதுமே சமூக விராதிகளுடன் அதிமுகவினர் பேசி வருகிறார்கள் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
அதிகாரிகளும் இதற்குத் துணை போக வாய்ப்புள்ளது. இதனால் வன்முறை வெடிக்கலாம். இதைத் தடுக்க மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் ராணுவத்தை தமிழ்நாட்டில் குவிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரப்பன் பொது மன்னிப்பு கேட்டு கோரிக்கை விடுத்தபோதே அந்தப் பிரச்சனையை அரசு தீர்த்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இந்த அரசு வறட்டுப் பிடிவாதத்துடன் பிரச்சனையை வேண்டுமென்றே வளர்க்கிறது. வீரப்பனிடம் இருந்து கேசட் வந்ததாக சிலர் புரளி கிளப்புகிறார்கள். கேசட் வந்திருந்தால் இந்நேரம் என்னை இவர்கள் சிறையில் அடைத்திருப்பார்கள்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் எல்லா கட்சிகளுமே ஒற்றுமையுடன் இருக்கின்றன. அது போல ஒரு ஒற்றுமையை உருவாக்கத் தவறியது முதல்வர் ஜெயலலிதா தான்.
தமிழ்நாட்டில் போலீஸ் ராஜ்ஜியம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட எமர்ஜென்சி காலம் மாதிரி தான் இருக்கிறது.
ரஜினி விவகாரத்தை நான் பெரிய விஷயமாக நினைக்கவில்லை என்றார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications