ஒரே மேடையில் வாஜ்பாய்-ஜெ: ரஜினிக்கு அழைப்பில்லை
சென்னை:
சென்னையில் வரும் மே 5ம் தேதி பிரதமர் வாஜ்பாயும் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்துக்கு ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
தமிழக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் குமாரவேலு இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
வரும் மே 5ம் தேதி சென்னை தீவுத் திடலில் பிரதமர் வாஜ்பாயும் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் நடக்கிறது என்றார்.
அதில் ரஜினியும் பங்கேற்பார் என்று அறிவித்திருந்தீர்களே என்று நிருபர்கள் கேட்டபோது, அது குறித்து ஏதும் இப்போது தகவல் இல்லை என்றார்.
அந்தக் கூட்டத்துக்கு ரஜினியை பா.ஜ.க. அழைக்குமா என்று கேட்டபோது, அது போன்ற திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை என்றார்.
ரஜினியை அழைத்தார் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் அவரை பா.ஜ.க. கை கழுவி விட்டுள்ளது. வலியப் போய் ஆதரவு தந்த ரஜினியின் நிலை இப்படியாகிவிட்டது.
திண்டுக்கல் சீனிக்கு கிடைத்த டோஸ்:
ரஜினி ரசிகர்களின் ஆதரவை ஏற்கத் தயார் என்று பேசிய அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் கடும் டோஸ் கிடைத்தது.
சீனிவாசனுக்கு கொஞ்ச நாளாகவே நேரம் சரியில்லை. சசிகலாவின் முழு ஆதரவு இருந்தும் கூட இந்த முறை திண்டுக்கல் தொகுதியை ஜெயலலிதா அவருக்குத் தரவில்லை.
பா.ம.கவை எதிர்த்து வந்தவாசியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இன்சார்ஜ் ஆகப் போட்டு, திருவண்ணாமலைக்கு பேக் செய்யப்பட்டார்.
இந் நிலையில் வந்தவாசி அருகே அதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய சீனி, ரஜினி ரசிகர்களுடன் அதிமுக தொண்டர்கள் கைகோர்ப்பதில் தவறில்லை. ரஜினியின் ஆதரவை அதிமுக ஏற்கிறது என்றார்.
சசிகலாவுக்கு சீனிவாசன் மிகவும் நெருக்கமானவர் என்பதால், ரஜினியின் ஆதரவை அதிமுக ஏற்றுக் கொண்டதாக செய்தி பரவியது.
மதுரை பிரச்சாரத்தில் இருந்த ஜெயலலிதா இந்த பத்திரிக்கை செய்திகளைப் பார்த்துவிட்டு சீனிவாசனை செல்போனில் பிடித்து வாங்கு, வாங்கு என்று வாங்கியிருக்கிறார்.
கடும் டோசினால் பதறிப் போன திண்டுக்கல் சீனிவாசன், அம்மா.. நான் அப்படி சொல்லலேம்மா.. பத்திரிக்கைக்காரங்கள் அப்படி போட்டுட்டாங்க என்று பம்மியிருக்கிறார். ஆனால் உளவுத்துறையின் ரிப்போர்டை கையில் வைத்துக் கொண்டு தான் பேசுவதை ஜெயலலிதா சுட்டிக் காட்ட, அம்மா மன்னிச்சுக்கோங்கம்மா என்று சரண்டர் ஆனாராம்.
இதையடுத்து அதிமுக ஆதரவு பத்திரிக்கைகளில் சீனிவாசனின் விளக்கம் வெளியாகியுள்ளது. அதில், வந்தவாசியில் நடந்த அதிமுக கூட்டத்துக்கு ரஜினி மற்றும் விஜய்காந்த் ரசிர்கர்கள் தாங்களாகவே வந்து கலந்து கொண்டனர். அவர்களாகவே வருவதால் எப்படி ஒதுக்க முடியும் என்று தான் நான் கூறினேன். ஆனால், யாரது ஆதரவை பெறுவது, ஒதுக்குவது என்பதை அம்மா தான் முடிவு செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.
ரஜினி தானே முன் வந்து தந்த ஆதரவை அதிமுக இதுவரை ஏற்கவில்லை. இந் நிலையில் நாங்கள் கூப்பிடாமல் அவர்களாகவே வந்தார்கள என்று ரசிகர்களை அசிங்கப்படுத்தும் விதத்தில் சீனிவாசன் மூலமாக அதிமுக விளக்கம் தந்துள்ளது.
அறிக்கையால் எபெக்ட்..
இந் நிலையில் பா.ஜ.க- அதிமுகவை ஆதரித்து ரஜினி விட்ட அறிக்கைக்கு தமிழகத்தில் அவ்வளவாக எபெக்ட் இல்லாததால், அவரே நேரடியாகப் பிரச்சாரத்துக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் ராமதாஸின் எதிரியும் வன்னியர் சங்கத் தலைவருமான ஏ.கே.நடராஜன்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ரஜினி ஏற்கனவே மனம் திறந்துவிட்டார். ஆனால், மீண்டும் ஒரு முறை அவர் மனம் திறக்க வேண்டும். பத்திரிக்கையாளர் கூட்டம், தனிப்பட்ட கூட்டம் அல்லது பிரச்சாரக் கூட்டம் என ஏதாவது ஒரு வகையில் அவர் மீண்டும் பேச வேண்டும். இதற்காக அவரை நேரில் சந்திக்க இருக்கிறேன்.
பா.ம.க போட்டியிடும் 6 தொகுதிகளிலும் ரஜினி பிரச்சாரம் செய்ய வேண்டும், ஒரு பொதுக் கூட்டத்திலாவது பேச வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications