திமுகவுக்கு உறுதியளிக்கப்பட்ட இலாகாக்கள் ஒதுக்கீடு
டெல்லி:
உறுதியளித்தபடி திமுகவுக்கு இலாகாக்களை ஒதுக்க பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியும் ஒப்புக் கொண்டுவிட்டனர். இதையடுத்து இந்தப் பிரச்சனை ஒருவழியாய் முடிவுக்கு வருகிறது.
நேற்று சோனியாவை சந்தித்த தயாநிதி மாறன் இன்று டி.ஆர். பாலுவுடன் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் சோனியாவையும் சந்தித்தனர். அப்போதுபிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.
டி.ஆர். பாலுவுக்கு தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறையோடு உறுதியளித்தபடி கப்பல்போக்குவரத்துத் துறையை ஒதுக்குவதாக மன்மோகன் சிங் அறிவித்தார்.
அதேபோல இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பழனி மாணிக்கத்துக்கு வர்த்தகத்துறைக்குப்பதிலாக நிதித்துறையை ஒதுக்குவதாகவும் அறிவித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய தயாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின்தலையீட்டால், உரிய நேரத்தில் பிரச்சனை தீர்ந்தது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
உறுதியளித்தபடி 7 திமுக அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கித் தரப்பட்டுவிட்டன. இதனால்பிரச்சனை தீர்ந்துவிட்டது.
திமுக அமைச்சர்களுக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்து ஜனாதிபதி அப்துல் கலாமுக்குபிரதமர் தகவல் அனுப்பிவிட்டார் என்றார் தயாநிதி.
அப்படியானால் உடனே திமுக அமைச்சர்கள் பதவியேற்பார்களா என்று நிருபர்கள் கேட்டபோது,சென்னையில் இன்று கூடும் திமுக உயர் மட்டக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தேபதவியேற்பு இருக்கும் என்றார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி, அன்னிய செலாவணி வழக்குகளை வைத்து அவருக்குநெருக்குதல் தரவே நிதியமைச்சகத்தை திமுக கோருகிறதா என்று நிருபர்கள் கேட்டபோது,அப்படியெல்லாம் ஏதுமில்லை என்றார் தயாநிதி.
கப்பலை விட்டுத் தந்த ராவ்: முன்னதாக தனக்கு ஒதுக்கப்பட்ட கப்பல் போக்குவரத்துத் துறையை திமுகவுக்கு விட்டுத் தர தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிதலைவர் சந்திரசேகர் ராவ் முன் வந்தார்.டி.ஆர். பாலுவுக்கு ஒதுக்கப்பட்ட தரைவழிப் போக்குவரத்துத் துறையுடன் இணைந்த கப்பல் போக்குவரத்துத் துறையை பிரித்து அதைராவிடம் வழங்கியது காங்கிரஸ். இதை திமுக ஏற்க மறுத்ததால், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்றுசந்திரசேகர ராவிடம் பேசினார்.அப்போது கூட்டணியின் ஒற்றுமைக்காக கப்பல் போக்குவரத்துத் துறையை விட்டுத் தர ராவ் முன் வந்தார். அவருக்குமன்மோகன் சிங் நன்றி தெரிவித்துக் கொண்டார்.இளங்கோவனின் துறை மாற்றம்:
இந் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவனுக்குத் தரப்பட்ட பெட்ரோலியத் துறை மாற்றப்பட்டுள்ளது. அவருக்குவர்த்தகம் மற்றும் தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதித்துறையிலும் பெட்ரோலியத்துறையிலும் கேபினட் அமைச்சரும், இணையமைச்சரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டாம் என்பதால் காங்கிரஸ் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது.
இப்போது நிதித்துறை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் இருக்கிறார். அதில் இணையமைச்சர் பதவி தமிழகத்தைச்சேர்ந்த பழனி மாணிக்கத்துக்குத் தரப்பட்டுள்ளது.
இந் நிலையில் பெட்ரோலியத்துறை கேபினட் அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த மணிசங்கர அய்யர் இருக்கும்போது,இணையமைச்சரும் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைமை முடிவு செய்து இளங்கோவனைமாற்றிவிட்டது.












Click it and Unblock the Notifications