காவிரி ஆணையத்தைக் கூட்ட கர்நாடகம் எதிர்ப்பு: பிரதமருக்கு கடிதம்
பெங்களூர்:
இப்போதைக்கு காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என கர்நாடக முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் பேசிய தரம்சிங், அவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
நாளை அவரை திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் சந்தித்து காவிரியில் நீர் திறந்துவிடுமாறு வலியுறுத்த உள்ளனர். இதற்கிடையே காவிரி ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய தரம்சிங்,
மே மாதத்தில் காவிரிப் படுகையில் உள்ள அணைக் கட்டுப் பகுதிகளில் மழை பெய்தது. ஆனாலும் அணைகளின் நீர் மட்டம் குறைந்தபட்ச அளவைக் கூடத் தொடவில்லை.
கடந்த இரு ஆண்டுகளாக மழை இல்லாததால் அணைகள் வறண்டுவிட்டன. இந்த ஆண்டு ஜூன் மாத மழையை நம்பித்தான் கர்நாடகம் உள்ளது. வறட்சியின் பிடியில் கர்நாடகம் உள்ளது. இந்த விவரங்களை பிரதமரிடம் தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும் தெரிவித்துள்ளேன்.
இதற்கிடையே மத்திய நீர்வளத்துறை தலைவர் வசிஷ்டா தலைமையில் மூன்று நிபுணர்கள் கொண்ட குழு இன்று கர்நாடகம் வரவுள்ளது. இந்தக் குழு எங்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும்.
நாங்களும் விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரி விவகாரம் குறித்து விவாதிப்போம் என்றார்.
துணை முதல்வர் சித்தராமையா கூறுகையில்,
கடுமையான வறட்சியின் பிடியில் கர்நாடக மக்கள் திண்டாடி வரும் நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் விடும் நிலையில் நாங்கள் இல்லை.
நாளை மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் வரும் திமுக கூட்டணி எம்.பிக்கள் என்ன கோரிக்கை வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வந்த பின்னர் தான் விவரம் தெரியும் என்றார்.












Click it and Unblock the Notifications