கொலை சதி- சங்கராச்சாரியார், திட்டம்- இளையவரின் தம்பி, கொலை செய்தது அப்பு கோஷ்டி!
சென்னை:
சங்கரராமன் கொலையில் சங்கராச்சாரியாருக்கு வலது கரமாக இருந்து செயல்பட்டது இளையவர் என்று அழைக்கப்படும்விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சகோதரர் ரகு தான் என்று தெரியவந்துள்ளது. இந்தக் கொலையைச் செய்தது சென்னையைச்சேர்ந்த அப்பு என்பவரின் தலைமையிலான கும்பல்.
இது குறித்து விசாரித்தபோது கிடைத்த திடுக் தகவல்கள்:
வலையில் விழுந்த ரகு:
ஆந்திராவைச் சேர்ந்த விஜயேந்திரரின் சகோதரர் ரகு காஞ்சி மடத்தில் அதிகாரம் செலுத்துவதாகவும், பணம் சுருட்டல் உள்பட பலமோசடிகளில் ஈடுபடுவதாகவும் புகார் உண்டு. ஆனால், மடத்தின் மரியாதை கெடும் என்பதால் யாரும் இது குறித்து வாய்திறக்கவில்லை.
ஆனால், போலீஸ் மட்டத்தில் ரகுவுக்கு நல்ல பெயர் இல்லை. அவர் வாட்ச் லிஸ்டில் இருந்து வந்தார். இந் நிலையில் சங்கரராமன்கொலை நடந்தவுடன் ரகு மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தினர் போலீசார்.
குறிப்பாக எஸ்.பி.பிரேம்குமாரின் நேரடி கண்காணிப்பில் வந்தார் ரகு. அவரது செல்போன், அவரது சென்னை வளசரவாக்கம்வீட்டு லேண்ட் லைன் போன்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டன.
கடந்த 2 மாதங்களாக கொலையாளிகளுடன் இவர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்தப் பேச்சுக்கள்அனைத்தையும் போலீஸார் ரகசியமாய் பதிவு செய்தனர். மேலும் அவரிடமே போலீசார் அவ்வப்போது விசாரிக்க ஆரம்பித்தனர்.
ரகுவின் திசை திருப்பல்:
இந்தக் கொலையில் போலீசார் சரியான கோணத்தில் விசாரணை நடத்துவதை உணர்ந்து கொண்ட ரகு, இந்தக் கொலையை திசைதிருப்பவும் ஒரு வேலை செய்தார். கொலையை திசை திருப்புவதற்காக போலியாக 5 பேரை நீதிமன்றத்தில் சரணடைய வைத்தார்.
கொலை நடந்த ஒருமாதத்தில், அதாவது கடந்த மாதம், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சென்னை முகப்பேரைச் சேர்ந்தபாண்டியன், சதீஷ், ஆறுமுகம், போளூரைச் சேர்ந்த தேவராஜ், அருண் ஆகிய 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சங்கரராமனை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று நீதிமன்றத்தில் அவர்கள் கூற, அவர்களை தங்கள் கஸ்டடியில் எடுத்துசகல மரியாதைகளுடன் விசாரித்தனர் போலீசார்.
வாக்குமூலம்:
அப்போது தான், நாங்கள் இந்தக் கொலையை செய்யவில்லை. எங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் தருவதாகவும், குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறும் ரகு சொன்னார். எங்களை ஜாமீனில் எடுப்பதாகவும் வழக்கை தான் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்தார்.இதனால் தான் சரணடைந்தோம் என்று உண்மையைப் புட்டுப் புட்டு வைத்தனர்.
முன் பணமாக தங்களுக்கு தலா ரூ. 60,000த்தையும் ரகு தந்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இந்த ஐந்து பேரில் ஒருவன் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜரவாதற்கு இரு நாட்களுக்கு முன்பாகத்தான் குண்டர் சட்டத்தில்காவல் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறான் என்பது போலீசாருக்குத் தெரியவந்து. சங்கரராமன் கொலைநடந்தபோது இவன் சிறையில் இருந்தான்.
தனிப்படைகள்:
இதையடுத்து பொய்யாக சரணடைந்த இவர்கள் மீது மோசடி வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிட்டு உண்மைக் குற்றவாளிகளைக்பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்தார் பிரேம் குமார். குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டுமானால், ரகுவை கண்காணிப்பதே சரிஎன்ற முடிவுக்கு வந்த போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்தனர்.
ரகுவின் போன்களை போலீசார் இன்டர்செப்ட் செய்தபோது தான் உண்மைக் குற்றவாளிகளின் அடையாளம் தெரிய ஆரம்பித்தது.
கொலையை செய்த அப்பு கோஷ்டி:
இதையடுத்து ஒரு நாள் அதிரடியாக ரகுவையும் கைது செய்தனர் போலீசார். அவரிடம் முதலில் மரியாதையாகப் பேசிப்பாத்தபோது மடத்தின் அரசியல் செல்வாக்கை வைத்து போலீசாரை மிரட்ட ஆரம்பித்தார். இதையடுத்து போலீஸ் ஸ்டைல்விசாரணை ஆரம்பித்தது.
அடி தாங்க மாட்டாமல் கொலையில் தனது தொடர்பை ஒப்புக் கொண்டார் ரகு. பிரபல தாதா வெள்ளை ரவியிடம் இருந்து பிரிந்துசென்னையில் தனியாக ரவுடி கோஷ்டி நடத்தி வரும் அப்பு என்பவனின் தலைமையிலான கும்பல் தான் சங்கரராமனைக் கொலைசெய்தது என்ற விவரத்தை போலீசாரிடம் சொன்னார் ரகு.
இந்த வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு ஒரு எஸ்.பி. 3 டி.எஸ்.பிக்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நூற்றுக்கும்அதிகமான போலீசார் மிக வேகமாக செயல்பட்டு, சென்னையில் சல்லடைபோட்டு அப்பு கோஷ்டியைச் சேர்ந்த சின்னா, கருப்புபாலா, ஸ்டாலின், மாட்டு சேகர், பாஸ்கர், கதிரவன், ஸ்ரீதர், சுந்தர், மகேஷ் ஆகிய 9 பேரை தங்கள் கஸ்டடிக்குள் கொண்டுவந்துவிட்டனர்.
தப்பினான் அப்பு:
ஆனால், கொலையை முன் நின்று நடத்திய அப்பு மற்றும் அம்பி என்ற இருவரும் தப்பிவிட்டனர். இவர்களைத் தேடி ஒரு படைகர்நாடகம் சென்றுள்ளது.
கைதான 9 பேருமே இந்தக் கொலையை சங்கராச்சாரியாரும் ரகுவும் சொல்லித் தான் செய்தோம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.இவர்கள் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சி மடத்துக்கு போன்:
கொலை நடந்த 3வது நிமிடமே இந்தக் கொலையாளிகள் காஞ்சி மடத்தை செல்போனில் தொடர்பு கொண்டு வேலை கச்சிதமாகமுடிந்துவிட்ட விவரத்தையும் சொல்லியிருக்கின்றனர். இதற்கான ஆதாராமும் இப்போது போலீஸ் கையில்.
அதே போல ஐசிஐசிஐ வங்கியில் இருந்து காஞ்சி மடத்தால் எடுக்கப்பட்ட 10 லட்சம் ரூபாயில் சில கட்டுகள் அப்படியேகொலையாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் அசைக்க முடியாத ஆதாரமாக உள்ளது.
இந்தக் கொலையில் ரகுவுக்குத் தொடர்பிருந்தாலும் அவரது அண்ணனான இளையவர் விஜயேந்திரை தாங்கள்சந்தேகிக்கவில்லை என்கின்றனர் போலீசார். சங்கராச்சாரியாரும் ரகுவும் சேர்ந்து நடத்திய கொலையே இது என்கின்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 15 பேர் (ஜெயேந்திரரையும் சேர்த்து) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரகுவை தங்கள் கஸ்டடியில் வைத்துள்ள போலீசார் அவரை இன்னும் கைது கணக்கில் காட்டவில்லை என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications