ஜாமீன் மனு விசாரணை 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் ஜாமீன் மனு மீதான மறுவிசாரணை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு கோரி ஜெயேந்திரர் இரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீது 2 நாட்கள் விசாரணை நடந்தது. அதன் பிறகு விசாரணை முடிவடைந்ததாகக் கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி பாலசுப்பிரமணியம்.
இந் நிலையில் நேற்று ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியம், சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டி மீண்டும் இந்த மனுமீது விசாரணை நடத்தக் கோரினார். இதனால் மீண்டும் நேற்று இரு தரப்பு வாதத்தையும் நீதிபதி கேட்டார்.
ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கிளப்பிய சில சந்தேகங்களுக்கு அரசுத் தரப்பில் இன்று பதில் அளிப்பதாக அரசு கூடுதல் வழக்கறிஞர் அபுடுகுமார் தெரிவித்தார். இதையடுத்து இன்று மீண்டும் விசாரணை தொடர்ந்தது.
அப்போது, இந்த மனு மீது டெல்லி வழக்கறிஞர் துல்சி ஆஜராகி வாதாடவுள்ளார். எனவே அவர் வருவதற்கு வசதியாக வரும்திங்கள்கிழமை வரை விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரப்பட்டது.
ஜெவை பாராட்டி ஜெயேந்திரரின் வழக்கறிஞர்:
இதற்கு ஜெயேந்திரரின் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியம் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் பேசுகையில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மீது என அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. மிகுந்த மனிதாபம் கொண்ட நபர் அவர்.அவரின் கீழ் 8 ஆண்டுகள் அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளேன். ஜெயேந்திரரைக் கைது செய்யும் முடிவைக் கூட மிகுந்த மனவருத்தத்துடன் தான் எடுத்தாகக் கூறியுள்ளார்.
சங்கராச்சாரியார் கைதாகி நெடு நாட்களாக சிறையில் இருக்கிறார். இதனால் அவருக்கு மனிதாபமானத்துடன் ஜாமீன் தரலாம் என்றார்.
ஆனால், இதையடுத்துப் பேசிய அரசு வழக்கறிஞர், முதல்வர் ஜெயலலிதாவின் கருத்துக்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் பாராட்டு தெரிவித்தற்குநன்றி. கைது செய்ய வேண்டிய சூழ்நிலை வந்ததற்காக முதல்வர் வருத்தத்தைத் தெரிவித்துள்ளாரே தவிர, அவரை ஜாமீனில் விடுவிக்கச்சொல்லவில்லை.
இந்த வழக்கில் சங்கராச்சாரியாருக்கு உள்ள தொடர்புகள் குறித்து முதல்வருக்கு நன்றாகத் தெரியும். இதனால் எங்கள் தரப்பு வாதத்துக்குஅவகாசம் அளித்து மூத்த வழக்கறிஞர் துல்சி வந்து ஆஜராகும் வகையில் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை 6ம் தேதிக்கு (திங்கள்கிழமைக்கு) ஒத்திவைப்பதாக நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம்அறிவித்தார்.












Click it and Unblock the Notifications