காஞ்சி மட மேலாளர் விரைவில் கைது?
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி மட மேலாளர் சுந்தரேச அய்யர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
சங்கரராமனைக் கொலை செய்த கூலிப்படையினருக்கு சங்கர மடத்தின் வங்கி கணக்கில் இருந்து பணம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுந்தரேச அய்யரை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில் இன்றும் சுந்தரேச அய்யர் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் முனியப்பன் ஆகியோர் சுந்தரேசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணை குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சுந்தரேச அய்யரிடமிருந்து பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
கொலையாளிகள் எத்தனை முறை சங்கரமடத்திற்கு வந்தனர், அவர்களை அழைத்து வந்தது யார், மற்றும் கூலிப்படையினருக்கு பணம்பட்டுவாடா செய்யப்பட்டது உள்ளிட்ட முக்கிய விபரங்களும் கிடைத்துள்ளன என்று கூறினார். இதனால் சுந்தரேச அய்யர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே காஞ்சி மடத்தின் கணக்கு விபரங்கள் குறித்து கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டி கேட்வங்கி, இந்தியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கூட்டுறவு நகர வங்கி மற்றும் டிட்கோ நிர்வாகிகளிடம் போலீஸார் விசாரணைநடத்தினார்கள்.












Click it and Unblock the Notifications