ஜெயேந்திரர்: குற்றப் பத்திரிக்கைக்கு போலீஸ் பூஜை நடத்தியது தவறில்லை- ஜெ
சென்னை:
ஜெயேந்திரர் வழக்கில் குற்றப் பத்திரிக்கையை எஸ்பி பிரேம்குமார் கோவிலுக்குக் கொண்டு சென்று பூஜை செய்ததில் எந்தத்தவறும் இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
கடந்த ஒரு வாரகாலமாக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பரபரப்பான விவாதத்துக்குபதிலளித்து ஜெயலலிதா பேசியதாவது:
சட்டம்-ஒழுங்கு சீராகப் பராமரிக்கப்படும் மாநிலம், தொடர்ந்து அமைதி காக்கப்படும் மாநிலம், மக்களிடையே நல்லிணக்கம்பேணப்படும் மாநிலம், நாட்டிலேயே அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் நம் தமிழ்நாடு தான்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் விருப்பு வெறுப்பு இல்லாமல், வேண்டியயோர் வேண்டாதவர் என்று வேறுபாடு இல்லாமல்சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டியது காவல்துறையின் கடமை. அந்தப் பணியை தமிழககாவல்துறை மிகச் சிறப்பாக செய்து கொண்டுள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
ஆனால், காவல்துறையில் ஒரு புதிய பழக்கத்தைப் பார்ப்பதாகவும், குற்றப் பத்திரிக்கையை கோர்ட்டுக்கு எடுத்துச் செல்வதற்குமுன்னால் கோவிலுக்கு எடுத்துச் சென்று பூஜை செய்யும் புதிய முறையை (ஜெயேந்திரர் விஷயத்தில்) தமிழக போலீசார்கையாள்வதாகவும், இது யாருடைய உத்தரவுப்படி நடக்கிறது என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ விநாயகமூர்த்தி இங்கே கேள்விஎழுப்பினார்.
விநாயகமூர்த்தி நாத்திகவாதி அல்ல, கடவுள் பக்தி கொண்டவர். முக்கியமாக எதையும் செய்வதற்கு முன் ஆண்டவனின் அருள்வேண்டுவது நமது பாரம்பரியம் என்பதை விநாயகமூர்த்தி மறந்துவிட்டாரா?
மாணவர்கள் தேர்வு எழுதப் போகும் முன் தாங்கள் சார்ந்த சமயத்தின்படி கோவிலுக்கோ, தர்ஹாவுக்கோ, மசூதிக்கோ,தேவாலயத்துக்கோ சென்று வழிபடுவார்கள்.
வணிகர்கள், தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் முன் தாங்கள் நம்பி பின்பற்றும் மதம் சார்ந்த வழிபாடு நடத்துவார்கள்.
ஏன் மகாகவி பாரதி கூட, எடுத்த காரியம் யாவினும் வெற்றி அருள்க என்று ஆதிசக்தியாம் மஹா காளியின் பாதம் பணிந்தேபாடல் இயற்றினார்.
இந்த வரையில் ஒரு காவல்துறை அதிகாரி தான் மேற்கொண்ட புலனாய்வில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் முன் தான்நம்பும் கடவுளை வணங்கி அந்தப் பணியைத் தொடர்வதில் என்ன தவறு இருக்க முடியும்?
இது அரசின் உத்தரவா என்று விநாயகமூர்த்தி கேட்டார். காவல்துறை வழக்குகளில் சட்டம் தான் கடமையைச் செய்யுமே தவிர,யாரும் யாருக்கும் எந்த உத்தரவும் பிறப்பிப்பதில்லை. மக்கள் தாங்கள் நம்பும் திருத்தலத்துக்குச் செல்வதைத் தடுக்க எந்தச்சட்டமும் இல்லை.
ஒரு முஸ்லீம் மசூதிக்கோ, ஒரு சீக்கியர் குருத்வாராவுக்கோ, ஒரு கிருஸ்தவர் தேவாலயத்துக்கோ செல்வதை தவறு என்று யாரும்சொல்ல முடியாது. அதே போல ஒரு இந்துவும் (எஸ்பி பிரேம்குமார்) கோவிலுக்குச் செல்வது அவரது தனிப்பட்ட உரிமை.
மதசார்பின்மையை கொலை செய்ததற்கு இணையான செயல் இது என்று விநாயகமூர்த்தி கூறினார். மதசார்பின்மை என்றால்என்ன? மதங்களை மறுப்பதோ அல்லது கடவுளை மறுப்பதோ அல்ல. மதசார்பின்மை என்றால் நாத்தீகவாதி என்று பொருள்அல்ல. இப்படித்தான் பலரும் தவறான கண்ணோட்டம் கொண்டிருக்கிறார்கள்.
மதசார்பின்மை என்பது அனைத்து மதங்களும் ஒன்றே என்று கருதுவது தான். தான் வணங்கும் திருத்தலத்துக்கு ஒருவர்செல்வதை விவாதப் பொருளாக்கக் கூடாது.
காவல்துறை அதிகாரிகளோ, போலீசாரோ திருத் தலத்துக்குச் செல்லக் கூடாது என்று தடுக்க சட்டம் ஏதும் இல்லை. காவலர்களும்மற்ற குடிமக்களைப் போலத்தான். அவர்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications