சித்திரையில் தமிழர் நித்திரை கலையட்டும்: கருணாநிதி
சென்னை:
உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிற தமிழர்களுக்கு தனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
புத்தாண்டையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழ்ப் புது வருடமான பார்த்திபா, துவங்குகிறது. இந்த நல்ல நாள் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியையும் வளத்தையும் அள்ளித்தரட்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா:
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்களுக்கு இந்தத் திருநாளில் எனது அகம் கனிந்த வாழ்த்துக்கள். புதிய சாதனைகளை நாம் படைக்கின்ற ஆண்டாகவும்,புதிய வெற்றிகளை நாம் பெறுகின்ற ஆண்டாகவும் புத்தாண்டுக்கு விளங்கட்டும். வழி மறிக்கும் தடைகளை உடைப்போம்.வளமார்ந்த தமிழகம் படைப்போம். தழைக்கட்டும் தலங்கள். கொழிக்கட்டும் வளங்கள்.
தமிழக தமிழர்க்கு மட்டுமின்றி தரணி வாழ் தமிழர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
கருணாநிதி:
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
இத் தரையில் புகழ் முத்திரைப் பதித்த வீரமும், விவேகமும், தாய்மொழி ஆர்வமும் கொண்டோர் தலை நிமிர்ந்தார், தன்மானமுரசறைந்தார் எனும் செய்தி, இன்பத்தேனாறாக நம் செவியில் பாய்ந்திட்டதெல்லாம் பழங்கதையாய்-பகற்கனவாய் ஆகாமல்,இந்தப் புத்தாண்டில் புதிய வரலாறாகப் பூத்துக் குலுங்கட்டும்.
ஏழைகள் சிரித்து மகிழவும் எத்தர்கள் கூனிக் குறுகிடவும், பொது மக்களின் குரலுக்கு புல் அளவு மதிப்பும் தராதவர்களின்ஆணவமும் அதிகாரக் குரலும் அடங்கி ஒடுங்கிடவும்- உண்மையான மக்களாட்சித் தத்துவம் மறுபிறவி எடுத்திடவும், இந்தச்சித்திரைத் திருநாளில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திடுவோம்.
புயல் வேகம், புதுவேகம் நம் உழைப்பிலே பெற்றிடுவோம்.
உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிற நம் தாய்த் தமிழ் உடன் பிறப்புக்களுடன், இந்த மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொள்வோம் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
வைகோ:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
சாதி, மத பூசல் நீங்கி- சகோதரத்துவமும் மனித நேயமும் தழைத்திடவும், கடந்த ஆண்டு சுனாமி தாக்குதலால் நேர்ந்த பேரழிவும்,இயற்கையின் இடரும் இனி ஏற்படாத பாதுகாப்பை இயற்கை அன்னை வழங்கிடுவதாகவும் வருங்காலம் அமையட்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்தது போல, வரும் தமிழ் ஆண்டில், சட்டமன்றத் தேர்தலிலும் கருணாநிதியின் தலைமையில்ஜனநாயக அரசு மலருவதற்கான உறுதியான சூழல் உருவாகி இருப்பது கவலையைப் போக்கும் மாமருந்தாக காட்சி அளிக்கிறதுஎன்று கூறியுள்ளார்.
வாசன்:
காங்கிரஸ் மாநிலத் தலைவர் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் புத்தாண்டு தமிழகத்தில் மக்களுக்கு நலன் தரும்மாற்றங்களை நிச்சயம் உருவாக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications