டி.ஆர்.பாலு மகன் திருமணம்: கருணாநிதி நடத்தி வைத்தார்
சென்னை:
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனின் திருமணம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் ராஜாவுக்கும், பிரபல தொழிலதிபர் லியோ முத்துவின் மகள் ஷர்மிளாவுக்கும் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் திருமணம் நடந்தது.
இதன்பின் கருணாநிதி மணமக்களை வாழ்த்தி பேசுகையில், இந்த மணவிழாவை நடத்தி வைத்ததில் நான் பெருமை கொள்கிறேன். மணமகனின் தந்தை பாலுவின் புகழ் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பெருகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக மத்திய அமைச்சர்களில் என்னை அழைத்து அதிக நிகழ்ச்சிகளை நடத்தியது பாலு தான். தமிழ்நாட்டில் சிலர் என்னை அழைக்காதே என்று சொல்ல, பிடிவாதமாக என்னை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.
நிலத்தில் மட்டுமல்ல, அவரது பணி கடலிலும் உயர்ந்து நிற்கிறது. சேது கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பு என் தம்பியின் கைக்கு வந்திருக்கிறது என்றார்.
திருமண விழாவில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி வைரமுத்து, மத்திய அமைச்சர்கள் ராசா, அகமது, ரகுபதி, வேங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications