பாஜக தலைவர் பதவி: அத்வானி திடீர் ராஜினாமா
டெல்லி:
பாஜக தலைவர் பதவியிலிருந்து அத்வானி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் சென்ற பாஜக தலைவர் அத்வானி, அந் நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை அத்வானி சந்தித்துப்பேசினார்.
ஜின்னாவை பாராட்டிய அத்வானி:
இந்தியப் பிரிவினைக்கு முக்கிய காரணமாக விளங்கிய பாகிஸ்தானின் நிறுவனரான முகமது அலி ஜின்னாவை அத்வானி வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.ஜின்னாவின் நினைவிடத்துக்கு தலையில் கர்ச்சீப் அணிந்து சென்ற அத்வானி, மரியாதை செலுத்தியதோடு, ஜின்னா ஒரு மதசார்பற்ற தலைவர் என்று பாராட்டினார்.
பாகிஸ்தானை மதசார்பற்ற நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று ஜின்னா அந் நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியதை அத்வானி சுட்டிக் காட்டினார். மேலும் பாபர்மசூதி இடிப்புக்கு வருத்தமும் தெரிவித்த அத்வானி, அந்த தினம் தனது வாழ்க்கையில் ஒரு சோகமான நாள் என்றார். மேலும் சங் பரிவார் அமைப்புகளின் அகண்டபாரதம் என்ற கொள்கை தனக்கு ஏற்புடையது அல்ல என்றார்.
போர்க் கொடி தூக்கிய ஆர்எஸ்எஸ்:
அத்வானியின் இந்தக் கருத்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனம் கிளம்பியது. பல இடங்களில் அத்வானியைகண்டித்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன.
அத்வானி தன்னுடைய எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் அவர் விலக வேண்டும் என்றும்விசுவ இந்து பரிஷத் கூறியது.
இந் நிலையில் நேற்று நாடு திரும்பிய அத்வானி நிருபர்களிடம் பேசுகையில், ஜின்னா குறித்து நான் பேசியதை வைத்து விவாதம் நடக்கிறது. இது போன்ற விவாதம்நடப்பது நல்லது தான் என்றார்.
அத்வானிக்கு வாஜ்பாய் ஆதரவு:
இதற்கிடையே அத்வானியின் கருத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வரவேற்று இன்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால், ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகிய அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு வலுத்தது. அத்வானி தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று இந்த அமைப்புகள்வலியுறுத்தின. ஆனால், அதை ஏற்க அத்வானி மறுத்துவிட்டார்.
இந் நிலையில், இன்று அத்வானி திடீரென தனது பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷியை தனது இல்லத்துக்குவரவழைத்த அத்வானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
பாஜகவில் உள்ள முக்கிய ஆர்எஸ்எஸ் தலைவர் சஞ்சய் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அத்வானியில் வீட்டில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கராச்சியில் இருந்து கிளம்பும் முன்பே என்னை தலைவர் பதவியில் இருந்துவிடுவிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷிக்கு ஒரு கடிதம் அனுப்பிவிட்டேன்.
என் வாழ்நாள் முழுவதும் எந்த கொள்கைக்காக உழைத்தேனோ அந்த கொள்கையை கட்டிக் காக்க உதவும் வகையில் இந்த ராஜினாமாவை ஏற்க வேண்டும்.
எனக்காக கட்சி செய்த தியாகங்களையும் நான் மறக்க மாட்டேன். மிக நிதானமாக யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்தவேண்டும் என்று பாஜக அரசு பாடுபட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் நான் பாகிஸ்தான் சென்றேன்.
பாகிஸ்தானில் நான் பேசியது எதையும் வாபஸ் பெற வேண்டிய அவசியமில்லை. அப்படி எதையும் நான் பேசிவிடவில்லை.
இவ்வாறு அத்வானி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குவிந்த பாஜக தலைவர்கள்:
அத்வானியின் ராஜினாமா குறித்து அறிந்தவுடன் பாஜக தலைவர்கள் அவரது வீட்டில் குவிந்துள்ளனர். ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு அவரை வலியுறுத்திவருகின்றனர்.
பிரமோத் மகாஜன், ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் போன்றவர்கள் அத்வானியுடன் பேசி வருகின்றனர்.
அதே போல ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும் அத்வானியின் வீட்டின் முன் குவிந்துள்ளனர். அவர்கள் விஎச்பிக்கு எதிராகவும் அத்வானிக்கு ஆதரவாகவும்கோஷம் எழுப்பியபடி உள்ளனர்.
ராஜினாமா: விஎச்பி வரவேற்பு
அத்வானியின் ராஜினாமாவை விஎச்பி தலைவரான பிரவீண் தொகாடியா வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் போய் இந்தியாவைக்காட்டிக் கொடுத்த அத்வானி தனது பதவியை ராஜினாமா செய்தது வரவேற்கத்தக்கது மட்டுமல்ல, அது மிக அவசியமானதும் கூட.
அவராக ராஜினாமா செய்யவில்லை. ஜின்னாவைப் பாராட்டியதன் மூலம் நாட்டையும் ராம பக்தர்களையும் தேச பக்தர்களையும் முதுகில் குத்திய அத்வானி ராஜினாமாசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஜின்னா பக்தராக மாறிவிட்ட அத்வானிக்கு ஜின்னாவின் பண்புகளும் வந்துவிட்டன. இதுவரை இந்து பக்தர் போல நடித்துள்ளார் அத்வானி. ராம ரத யாத்திரை நடத்தியஅத்வானி இப்போது தான் தனது சுய முகத்தைக் காட்டியுள்ளார் என்று கூறியுள்ளார்.அத்வானி மீது சிவசேனை தாக்கு:
அதே போல சிவசேனையின் ஏடான சாம்னாவும் அத்வானியை கடுமையாகத் தாக்கியுள்ளது.
அதில் பால் தாக்கரே எழுதியிருப்பதாவது:
ஜின்னாவைப் புகழந்து தன்னை யாராவது மதசார்பில்லாதவராகக் காட்டிக் கொள்ள முயன்றால் அந்த அரசியலை 80 கோடி மக்கள் கொண்ட இந்து இந்தியா என்றும்மன்னிக்காது. நாட்டைப் பிரித்து தனது சுயநலத்துக்காக தனி நாடு கேட்டவர் ஜின்னா.
ஜின்னாவைப் பாராட்டியதோடு நிற்காமல் பாபர் மசூதி இடிப்புக்கு பாகிஸ்தான் முஸ்லீம்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் அத்வானி. அந்த இடிப்பு தினம் தனதுவாழ்வில் சோகமான நாள் என பல்டி அடித்திருக்கிறார்.
இந்துத்துவாவை சிவசேனை உயர்த்திப் பிடிக்கும். இந்துத்துவாவால் யாராவது அரசியல் அதிகாரத்தை இழந்திருந்தால் அவர்களுக்காக யாரும் வருந்தத்தேவையில்லை. அவர்கள் பாகிஸ்தானில் உள்ள அரசியல் நினைவிடங்களில் அமைதியாகப் போய் தூங்கட்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உட்கட்சி விவகாரம்- காங்கிரஸ்
பாஜக தலைவர் பதவியிலிருந்து அத்வானி விலகியிருப்பது அது அக்கட்சியின் உள்விவகாரம் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாககாங்கிரஸின் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி கூறுகையில், அத்வானி பதவி விலகல் பாஜகவின் உட்கட்சி விவகாரம் ஆகும்.
பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பாஜகவின் இமேஜை மாற்றுவதற்காகத் தான் அத்வானி பாகிஸ்தானில் வைத்து இவ்வாறு கூறியுள்ளார். முன்புவாஜ்பாய் இந்த முகமூடியை அணிந்திருந்தார். இப்போது அவரது வேலையை அத்வானி செய்கிறார், அவ்வளவு தான் வித்தியாசம் என்றார்.












Click it and Unblock the Notifications