போலி வாக்காளர்கள்: ஓபி மனு தள்ளுபடி- பெரும் நெருக்கடியில் அதிமுக!
சென்னை:
லட்சக்கணக்கில் போலி வாக்காளர்களைச் சேர்த்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் மீது தேர்தல்கமிஷன் நடவடிக்கை எடுக்கத் தடை கோரி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது.
இதையடுத்து அதிமுகவினர் மீது தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் பாயும் என்று தெரிகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. அப்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடாகலட்சணக்கானவர்களை அதிமுகவினர் சேர்த்தனர்.
போலியான பெயர்கள், முகவரிகள் கொண்ட ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை அமைச்சர்களும் அதிமுகவினரும் கத்தைகத்தையாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் தந்தனர். மேலும் 15 வயது கூட ஆகாத பலரது பெயர்களையும் பட்டியலில்சேர்த்திருந்தனர்.
அதை வாங்காத அதிகாரிகளை மிரட்டிய அதிமுகவினர் அந்த விண்ணப்பங்களை வலுக்கட்டாயமாக சேர்க்க வைத்தனர்.
இந்த போலி வாக்காளர்கள் குறித்து சரமாரியாக புகார்கள் வந்ததையடுத்து விண்ணப்பங்களை தீவிரமாக சரி பார்க்க மத்தியதேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநில தேர்தல் கமிஷன் வீடு வீடாக விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணியில்ஈடுபட்டது.
அப்போது மொத்தம் தரப்பட்ட 19.40 லட்சம் விண்ணப்பங்களில் இவர்களில் 12.94 லட்சம் விண்ணப்பங்கள் போலியானவைஎன்று தெரியவந்தது.
இதையடுத்து போலி வாக்காளர்களைச் சேர்த்தவர்கள் மீது கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்ய மாநில தேர்தல்ஆணையத்துக்கு மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக தேர்தல்அதிகாரியான நரேஷ் குப்தா இந்த விஷயத்தில் இன்னும் தீவிரமாக களமிறங்கவில்லை.
இந் நிலையில் போலி வாக்காளர்கள் விஷயத்தில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கிரிமினல் வழக்குகளில்சிக்க வாய்ப்பிருப்பதை உணர்ந்த அதிமுக தலைமை தனது கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்க்க அமைச்சர்ஓ.பி. மூலமாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதில், போலி வாக்காளர் விண்ணப்பங்களை அளித்தவர்கள் மீது மட்டுமே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியும்.மாறாக மனுக்களை வாங்கிக் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியம், நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் ஓ.பியின் மனுவிசாரணைக்கே ஏற்புடையதல்ல என்று கூறி இன்று தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம்:
கடந்த 1960ம் ஆண்டே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, விண்ணப்பத்தில்கையெழுத்துப் போட்டவர்கள் மட்டுமல்லாது, போலி வாக்காளர் மனுக்களைக் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கதேர்தல் ஆணையத்திற்கு உரிமை உண்டு.
எனவே மனுதாரரின் வாதம் பொருத்தமற்றது, ஏற்க முடியாதது. தற்போதைய விவகாரத்தில், போலியான மனுக்களைக்கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு முழு உரிமை உண்டு. எனவே பன்னீர்செல்வத்தின் மனுதள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பையடுத்து அதிமுகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுமார் 13 லட்சம் போலி வாக்காளர்களின்மனுக்களையும் அதிமுக முக்கியப் புள்ளிகளே ஒட்டுமொத்தமாக தேர்தல் கமிஷனிடம் கொடுத்தார்கள் என்று வலுவானகுற்றச்சாட்டுக்களும், அதற்கான ஆதாரங்களும் உள்ள நிலையில் அமைச்சர்கள் உள்பட அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள் தேர்தல்ஆணையத்தின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications