சர்க்கரை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: ஜெ அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடிப்படைச்சம்பளத்துடன் அகவிலைப்படியை இணைத்தும், ஊதிய உயர்வு, வாடகைப்படி உயர்வு, மருத்துவ படி உயர்வு, சலவைப்படிஉயர்வு போன்ற பல்வேறு சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் 16 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் 4, 100 பேர் நிரந்தரதொழிலாளர்களாகவும், 2, 700 பேர் பருவ காலத் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதிய உயர்வுவழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனடிப்படையில் வெளியிடப்படும் அறிவிப்புகள் வருமாறு:
தற்போது தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 1,700 ரூபாயும், அதிகபட்சம் 9,025 ரூபாயும் அடிப்படை சம்பளமாக பெற்றுவருகின்றனர். தற்போது உள்ள மாறுபடும் அகவிலைப்படியில் 1, 700 ரூபாய், அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும்.மேலும், தொழிலாளர்கள் வகித்து வரும் பதவி நிலைக்கு ஏற்ப ரூ.305 முதல் ரூ.395 வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு புதியஅடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
இவ்வாறு அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்படும் போது, ஒவ்வொரு ஆறு ஆண்டு கால பணிக்காலத்துக்கும் ஒரு கூடுதல் ஊதியஉயர்வு வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் கூடுதல் ஊதிய உயர்வு அதிகபட்சம் நான்கு என நிர்ணயிக்கப்படும். இதனால்,ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ள ஒவ்வொரு தொழிலாளரும் குறைந்தபட்சம் 35 ரூபாயும், அதிகபட்சம் 460 ரூபாயும்கூடுதல் ஊதிய உயர்வு பெறுவர்.
இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்தில் வழங்கப்படும் அகவிலைப்படி ஒவ்வொரு புள்ளிக்கும் தற்போதுவழங்கப்படும் 2.15 ரூபாயில் இருந்து 2.30 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும்.
தொழிலாளர்களின் பணி நிலைக்கு ஏற்ப, வீட்டு வாடகைப்படி தற்போது 140 ரூபாயில் இருந்து 240 ரூபாய் வரைவழங்கப்படுகிறது. இது குறைந்தபட்சம் ரூ.380 எனவும், அதிகபட்சம் ரூ.540 எனவும் நிர்ணயிக்கப்படும்.
தற்போது மாதந்தோறும் 150 ரூபாய் என வழங்கப்படும் மருத்துவப்படி, 225 ரூபாயாக உயர்த்தப்படும்.
தற்போது 45 ரூபாய் என வழங்கப்படும் சலவைப்படி, 60 ரூபாயாக உயர்த்தப்படும்.
இவ்வாறு வழங்கப்படும் ஊதிய உயர்வு குறைந்தபட்சம் ரூ.690 எனவும், அதிகபட்சம் 1, 275 ரூபாயாகவும் இருக்கும்.
இந்த ஊதிய உயர்வு, முன் தேதியிட்டு 2005ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து செயல்படுத்தப்படும். இந்த ஊதிய உயர்வுஐந்து ஆண்டு காலத்துக்கு, அதாவது 2010ம் ஆண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும். 2005 ஏப்ரல் முதல் வழங்கப்படவேண்டிய ஊதிய நிலுவைத் தொகை ரொக்கமாகவே வழங்கப்படும்.
இவ்வாறு வழங்கப்படும் ஊதிய உயர்வால், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 7.49கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 2005 மார்ச் வரையிலான இடைப்பட்ட காலத்துக்கு, தொழிலாளர்கள்வகித்து வரும் பதவி நிலைக்கு ஏற்ப, 8, 250 ரூபாய் முதல் 20, 600 ரூபாய் வரை நல்லெண்ணத் தொகையாக வழங்கப்படும். இந்தநல்லெண்ணத் தொகையும் ரொக்கமாகவே வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
| ||||
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |