கொடைக்கானலைக் கலக்கும் கர்நாடக எம்.எல்.ஏக்கள்
கொடைக்கானல்:
கொடைக்கானலில் முகாமிட்டுள்ள கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் படு உற்சாகமாக பொழுதைக் கழித்து வருகிறார்கள்.
கர்நாடகத்தில் கூட இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்திருக்க மாட்டார்கள் அங்கிருந்து தமிழகம் வந்துள்ள பாஜகஎம்.எல்.ஏக்கள். அந்த அளவுக்கு சந்தோஷமாக, எந்த வித வேலைப்பளுவோ, பிரச்சினையோ இல்லாமல் படு நிம்மதியாக டூர்அடித்துக் கொண்டுள்ளனர்.கர்நாடக அரசியல் நிலையைத் தொடர்ந்து தமிழகம் வந்துள்ள 76 பாஜக எம்.எல்.ஏக்களும் முதலில் மகாபலிபுரம் போய் சுற்றிப்பார்த்தனர். பின்னர் 3 சொகுசுப் பேருந்துகளில் கொடைக்கானலுக்கு திங்கள்கிழமை காலை கிளம்பினர்.
கொடைக்கானலுக்கு வந்துள்ள அவர்கள் ஆட்டுவாம்பட்டியில் உள்ள ஹில் கண்ட்ரி என்ற தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.கொடைக்கானலுக்கு வந்தது முதலே படு ஜாலியாக இருந்து வருகின்றனர் பாஜக எம்.எல்.ஏக்கள்.
அவர்களில் சிலர் கடை வீதிக்குப் போய் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கித் தள்ளினர். சிலர் குறிஞ்சியாண்டவர் முருகன்கோவிலுக்குப் போய் பக்தியுடன் தரிசனம் செய்தனர். சிலர் ரிசார்ட்டை விட்டு வெளியே வராமல் டிவி பார்த்துக் கொண்டும்,செய்தித்தாள்களைப் படித்தும் பொழுதைப் போக்கினர்.
ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தமிழில் பேசுவதால் கடை வீதிகளுக்குப்போவதற்கோ, கோவிலுக்குப் போவதற்கோ, ஊரை சுற்றிப் பார்ப்பதற்கோ மொழிப் பிரச்சினை எதுவும் எழவில்லை.
சுற்றுப்பயணமாக வந்திருந்தாலும் தங்களது கடமைகளை அவர்கள் செய்யத் தவறவில்லை. காலையிலும், மாலையிலும்ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக் கூட்டங்களில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்கின்றனர். பெங்களூரிலிருந்து வந்துள்ளஆர்ட் ஆப் லிவிங் அமைப்பின் ரவிபிரசாத் சொல்லிக் கொடுக்கும் யோகாசனப் பயிற்சிகளையும் எம்.எல்.ஏக்கள் செய்கிறார்கள்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலின் அழகை எம்.எல்.ஏக்கள் பிரிவு பிரிவாக பிரிந்து சுற்றிப் பார்த்துரசித்து வருகின்றனர். இன்று முழுவதும் அவர்கள் கொடைக்கானலிலேயே இருக்கிறார்கள். மாலையில் மதுரை சென்று மீனாட்சிஅம்மனை தரிசிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
மதுரை பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமியை தரிசிக்கவும் கர்நாடகஎம்.எல்.ஏக்கள் திட்டமிட்டுள்ளனர்.
தங்களது தமிழக பயணம் குறித்து பசவராஜ் என்ற எம்.எல்.ஏ. கூறுகையில், ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இங்கு சட்டம்ஒழுங்கு மிகவும் அருமையாக இருக்கிறது. அனைத்து மக்களும் அமைதியாக இருக்கிறார்கள். சாலைகள் நன்றாக உள்ளன.
முதலில் தமிழகம் வருவதற்கு நாங்கள் பயந்தோம். எங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுமோ என்று அஞ்சினோம். ஆனால்இங்கு வந்த பிறகு தான் எங்களுக்கு உண்மை நிலையே புரிந்தது.
தமிழகம் பற்றி கர்நாடகத்தில் கூறுவதற்கு நேர்மாறாக இங்கு அமைதியான நிலை உள்ளது. எங்களை அனைவரும் நன்குவரவேற்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறோம் என்றார் பசவராஜ்.












Click it and Unblock the Notifications