மீண்டும் அதிமுக வெற்றி பெறும்: கருத்துக் கணிப்பு
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என இண்டியா பவுண்டேஷன் என்ற அமைப்புநடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இண்டியா பவுண்டேஷன் நிறுவனத்திற்காக மார்க்கெட்டிங் அண்ட டெவலப்மென்ட் ரிசர்ச் அசோசியேட்ஸ் என்ற நிறுவனம்கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. ஜனவரி 19ம் தேதி முதல் 27ம் தேதி, 20 மாவட்டங்களைச் சேர்ந்த 20 சட்டசபைத்தொகுதிகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.2000 ஆண், பெண்கள் இதில் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.
அதிமுகவுக்கு வாக்காளர்கள் மத்தியில் 44.5 சதவீதமும், திமுகவுக்கு 43.7 சதவீதமும் ஆதரவு இருப்பதாகவும், இதனால் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு 146 முதல் 151 இடங்கள் வரை கிடைக்கக் கூடும். திமுக கூட்டணிக்கு 78 முதல் 83 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளைப் பொறுத்தே அக்கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இருந்த வாக்காளர் மன நிலை வெகுவாக மாறியுள்ளதாகவும், இதற்கு ஜெயலலிதா அறிவித்த பல்வேறு சலுகைகள், திட்டங்களே முக்கியக் காரணம் எனவும் கருத்துக் கணிப்பில்தெரிய வந்துள்ளது.
இதே அமைப்பு கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜெயலலிதாவின் ஆட்சி திருப்தி என கருத்து தெரிவித்தோர் எண்ணிக்கை 31 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போதைய கருத்துக்கணிப்பில் இது 62 சதவீதமாக எகிறியுள்ளது.
அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு வட மாவட்டங்களில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 53 சதவீதம் பேரும், கருணாநிதிக்கு ஆதரவாக 43சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 56 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்கும், 42 சதவீதம் பேர் கருணாநிதிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேற்கு மாவட்டங்களில் 65 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்கும், 33 சதவீதம் பேர் கருணாநிதிக்கும் வாக்களித்துள்ளனர். தென் மாவட்டங்களில் 63 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்கும், 35 சதவீதம் பேர் கருணாநிதிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வன்னியர் பெல்ட் என அழைக்கப்படும் வட மாவட்டங்களில் மட்டுமே கருணாநிதிக்கு அதிக ஆதரவு காணப்படுகிறது. தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஜெயலலிதா மிகுந்தசெல்வாக்குடன் திகழ்கிறார்.
3ல் 1 பங்கு வாக்காளர்கள் ஜெயலலிதாவின் ஆட்சியில் தங்களது வாழ்க்கைத் தரம் திருப்திகரமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழக வாக்காளர்களின்முக்கியப் புகாராக மோசமான சாலை வசதி, கழிவு நீர் வசதி, குடிநீர்ப் பிரச்சினை, பொதுக் கழிப்பறைகள், தெரு விளக்குகள் ஆகியவை உள்ளன. ரேஷன் கார்டு வினியோகத்தில் நடந்த குளறுபடிகளும் வாக்காளர்களின் பெரும்பாலனோரின் குறைபாடாக உள்ளது.
அதேபோல வெள்ள நிவாரண நிதியுதவி கிடைக்கவில்லை என பெரும்பாலானோர் குறை கூறியுள்ளனர். பாமக, மதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் செல்வாக்கில் பெரும் சரிவு காணப்படுவதும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பாஜகவின் ஓட்டு மிகவும் குறைந்துவிட்டது. தனித்துப் போட்டியிட்டால் அனைத்துத் தொகுதிகளிலும் அக் கட்சிக்கு பெரும் தோல்வி உறுதி எனத் தெரிய வந்துள்ளது.
வன்னியர்களின் பெல்ட் எனப்படும் பகுதிகளில் பாமகவின் செல்வாக்கில் கணிசமசான சரிவு காணப்படுகிறது. இதுவரை பாமகவுக்கு ஆதரவாக இருந்த பெரும்பாலானோர் இந்த முறை அதிமுகவுக்கு சாதகமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துக் கணிப்பில் கருத்து தெரிவித்தவர்களில 14 சதவீதம் பேர், வாக்குப் பதிவின்போது தங்களது மன நிலையில் மாற்றம் வரலாம் எனத் தெரிவித்துள்ளனர். வழக்கமாக இந்த அளவு 4 முதல் 5 சதவீதம் வரைதான் இருக்கும்.
கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்ட இண்டியா பவுண்டேஷன் தலைவர் தியாகராஜன், இதேபோல மேலும் 3 கருத்துக் கணிப்புகளை நடத்தப் போவதாகவும், அதன் மூலம் வாக்காளர்களின் மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் தெரிய வரும் என்றார்.












Click it and Unblock the Notifications