ரூ. 800 கோடி மோசடி: தொழிலதிபர் கைது
சென்னை:
பங்கு பத்திர ஊழலில் பிரபலமான ஹர்ஷத் மேத்தாவைப் போல ரூ. 800 கோடி அளவுக்கு பெரும் முறைகேட்டில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த கொல்கத்தா தொழிலதிபரை சிபிஐ கைது செய்துள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் தினேஷ் டால்மியா. சென்னையில் டிஎஸ்க்யூ சாப்ட்வேர் என்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு சென்னை, டெல்லி, கொல்கத்தாவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இருப்பினும் பெரும்பாலும் டெல்லியில்தான் தங்குவார் டால்மியா.சாப்ட்வேர் தொழில் தவிர பங்கு மார்க்கெட்டிலும் டால்மியா ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஹர்ஷத் மேத்தா விவகாரம் வெடித்தபோது அதில் இவரது பெயரும் அடிபட்டது. மேத்தாவுக்கு மிகவும் நெருக்கமானவரான கேத்தன் பரீக் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து டால்மியாவும் ரூ. 1,000 கோடி வரை மோசடி செய்ததாக செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் டால்மியா தலைமறைவாகி விட்டார். அவரை சிபிஐ தீவிரமாக தேடி வந்தது. சர்வதே போலீஸார் உதவியுடனும் டால்மியா தேடப்பட்டு வந்தார். இந் நிலையில் டெல்லியில் பதுங்கியிருந்த டால்மியா சிபிஐ பிடியில் சிக்கினார்.
இதையடுத்து அவரை சென்னைக்கு கொண்டு வந்தனர். சென்னை எழும்பூர் கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் டால்மியாவை ஆஜர்படுத்தினர். இங்கு ரூ. 594.88 கோடி அளவுக்கு பங்கு பத்திரங்களில் மோசடி செய்ததாக டால்மியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டால்மியாவை விசாரணைக்காக தங்களது காவலில் அனுப்புமாறு சிபிஐ வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி அருள்ராஜ், 11 நாள் காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று இரவே டால்மியா மீண்டும்டெல்லிக்குக் கொண்டு போகப்பட்டார். பின்னர் கொல்கத்தா கொண்டு சென்று அங்கும் விசாரிக்கப்படவுள்ளார். மொத்தம் ரூ. 800 கோடி அளவுக்கு டால்மியா பங்கு பத்திர மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதுவிர அமெரிக்காவிலும் அவர் தனது கைவரிசையைக் காட்டி அங்கும் அவர் மீது ஒரு வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
சிபிஐ விசாரணையின்போதுதான் டால்மியா இன்னொரு ஹர்ஷத் மேத்தாவா என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications