எங்களை யாருமே கூப்பிடலை! பாஜக ஏக்கம்
திருவண்ணாமலை:
அதிமுக உள்பட எந்தக் கட்சியும் எங்களுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்று சட்டசபை பாஜக தலைவர் கே.என்.லட்சுமணன் விரக்தியாக கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த பாஜகவின் மக்கள் தரிசன கூட்டத்தில் கலந்து கொண்டு லட்சுமணன் பேசுகையில், வாஜ்பாய் தலைமையிலான முந்தைய மத்திய அரசின் சாதனைகளை மக்கள் தரிசன யாத்திரை மூலம் மக்களுக்கு நினைவுபடுத்தி வருகிறோம்.வரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். 3வது அணி அமைக்க மாட்டோம். கூட்டணி தொடர்பாக இதுவரை அதிமுகவிலிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை. பிற கட்சிகளும் எங்களைக் கூப்பிடவில்லை. நாங்களும் யாரையும் அணுகவில்லை. அழைப்பு ஏதேனும் வந்தால் அதுகுறித்து யோசிப்போம்.
தற்போதைய அதிமுக அரசுக்கு முந்தைய திமுக அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது, சிறப்பான ஆட்சியைத் தந்தது. ஊழல் ஏதும் நடக்கவில்லை. ஆனால் பின்னர் வந்த அதிமுக ஆட்சியில், கடைசி 2 வருடங்களில்தான் மக்களுக்கு நன்மை தரும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. முதல் 3 வருடங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு சிறப்பாக இல்லை.
திமுக கூட்டணியில் வைகோவால் ஏற்பட்ட சலசலப்புக்கு அதிமுகதான் காரணம். அதில் அதிமுக வெற்றி அடைந்துள்ளது. கூட்டணி கலகலத்துப் போய் விட்டது. உடைந்த சட்டியாக மாறி விட்டது. எப்படி ஒட்ட வைத்தாலும் அது ஒட்டாது. உடைந்தது உடைந்ததுதான் என்றார் லட்சுமணன்.
தலித்-பிசிகளுக்கு அதிக சீட்:
இந் நிலையில் பாஜகவின் தமிழக தேர்தல் பிரச்சாரம், யுக்திகள், கூட்டணி குறித்து விவாதிக்க அக் கட்சியின் மாநில செயற்குழுவரும் 6ம் தேதி சென்னயில் கூடுகிறது.
தேர்தல் அறிக்கை தயாரிப்பது, பிரச்சாரக் குழு அமைப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ள அக் கூட்டத்தில் பாஜகதமிழக பொறுப்பாளர் பிரதாப் ரூடி, தேசிய துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தேசிய பொதுச் செயலாளர் இல.கணேசன்போன்றவர்கள் கலந்து கொள்கின்றனர்.
வரும் தேர்தலில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களும், பெண்களுக்கும் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க பாஜக முடிவுசெய்துள்ளது.
தேர்தலில் தனித்துப் போட்டி என பாஜக கூறினாலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ளூர பெரும் ஆசையுடன் உள்ளதுஅந்தக் கட்சி. ஆனால், இதுவரை அவர்களை அதிமுக அழைக்கவே இல்லை என்பதால் தனித்துப் போட்டியிட வேண்டியநிலைக்கு அக் கட்சி தள்ளப்பட்டு வருகிறது.
கர்நாடக பாஜகவில் பூசல்:
இதற்கிடையே கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் (குமாரசாமி கோஷ்டி)- பாஜக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற சிலவாரங்களிலேயே கோஷ்டிப் பூசல் வெடித்துள்ளது. பாஜகவில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
இரு வாரங்களுக்கு முன் பாஜக சார்பில் 11 பேரும், குமாரசாமியின் கட்சி சார்பில் 9 பேரும் அமைச்சர்களாகினர்.
ஆனால், பாஜகவில் முற்பட்ட ஜாதியினருக்கே அமைச்சரவையில் அதிகமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பிறஜாதியினர் புழுங்க ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் நடிகரும் பாஜக எம்எல்சியுமான முக்கிய மந்திரி சந்துரு, அமைச்சர் பதவி கிடைக்காததால் கட்சிப் பதவிகள்அனைத்தையும் ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் பாஜக எம்எல்ஏக்களில் 21 பேர் அதிருப்தியுடன் இருப்பதாகவும், அவர்கள் தங்களை ஆதரிப்பதாகவும் தேசிய இந்துசேனை என்ற அமைப்பின் தலைவர் பிரமோத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications