நெல்லை- பறவை காய்ச்சலால் மாடுகள் சாவு?
திருநெல்வேலி:
நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் பீதி இன்னும் குறையாத நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நவநீத கிருஷ்ணபுரம் என்ற கிராமத்தில் 9 மாடுகள் திடீரென இறந்தன.
இதனால் அவற்றிற்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்ற பீதி ஏற்பட்டுள்ளது.இந்தக் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவருக்கு சொந்தமான 9 மாடுகள் அடுத்தடுத்து இறந்து போயின. உடனடியாக விரைந்து வந்த கால்நடைத்துறை அதிகாரிகள், இறந்த மாடுகளைக் கைப்பற்றி அவற்றை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆந்த்ராக்ஸ் அல்லது பறவைக் காய்ச்சலால் அந்த மாடுகள் இறந்தனவா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ஊரில் உள்ள அனைத்து மாடுகளுக்கு தடுப்பூசி போடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முட்டை விலை தொடர்ந்து வீழ்ச்சி:
இதற்கிடையே கோழிக்கறி மற்றும் முட்டை விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கோழி மற்றும் முட்டை விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கிலோ கோழிக்கறி ரூ. 70 வரை விற்று வந்தது. தற்போது அது ரூ. 30க்கு விற்று வருகிறது. இதபோல முட்டை விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒரு முட்டை ரூ. 1.20 வரை விற்று வந்தது. தற்போது 90 பைசாவுக்கு அது குறைந்துள்ளது.
சாலைகளில் முட்டை கடைகள்:
இதனால் கடைகளில், கிட்டங்களிகளில் தேக்கமடைந்துள்ள முட்டைகளை டிரை சைக்கிள்களில் வீடு வீடாகக் கொண்டு சென்று விற்பது அதிகரித்து வருகிறது.
மேலும் ஆங்காங்கே சாலையோரங்கில் பிளாட்பார முட்டைக் கடைகளும் முளைத்து வருகின்றன. இங்கு கேட்கும் விலைக்கு முட்டையை விற்கின்றனர்.
இந் நிலையில் முட்டை விலையைக் குறைப்பது தொடர்பான முடிவு நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
சிக்கன் மேளா:
இதற்கிடையே, கோழிக்கறி குறித்த மக்களின் பயத்தைப் போக்கும் வகையில் நாமக்கல்லில் சிக்கன் மேளா என்ற பெயரில் கோழிக்கறி விருந்து ஒன்றை நடத்த நிாமக்கல் பிராந்திய கோழிக்கறி விற்பனையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications