உயர் நீதிமன்றத்துக்கு மேலும் ஒரு ஆந்திர நீதிபதி!
சென்னை:
ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி பத்ருடு, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக காலியாக இருந்த நீதிபதி பணியிடங்களுக்கு பெரும் இழுத்தடிப்புக்குப் பின், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்குப் பின், மத்திய அரசு சமீபத்தில் 17 நீதிபதிகள் நியமித்தது.இதைத் தொடர்ந்து ஆந்திர உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதன் மூலம் தமிழக மாவட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு பாதிப்பு ஏற்படும் (உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர் பெறுவதில் பாதிப்பு) என அவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இந் நிலையில், மேலும் ஒரு ஆந்திர மாநில நீதிபதி தற்போது சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி பத்ருடு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.
அவரை சென்னைக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்த பின்னர் சென்னை வந்து பதவியேற்பார்.
இவரையும் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயருகிறது.
கேரள நீதிபதியின் நியமனம் ரத்து:
இதற்கிடையே வக்கீல்கள், பல்வேறு அமைப்புகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியின் இயக்குனராக நியமிக்கப்பட்ட, கேரள ஓய்வு பெற்ற நீதிபதி அச்சுதன் உண்ணியின் நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழக நீதிமன்றங்களில் தொடர்ந்து வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்தார்.
இதன் மூலம் தமிழக வழக்கறிஞர்கள், நீதிபதிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என அவர் ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.
இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, தற்போது அச்சுதன் உண்ணியின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் ரத்து செய்துள்ளார்.
உண்ணிக்குப் பதில், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.விமலா நீதித்துறை அகாடமி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் தங்கள் செல்வாக்கை பல வகைகளிலும் பயன்படுத்தி கேரள மாநிலத்தவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் முக்கியப் பதவிகளைப் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications