சென்னை காவல்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:
சென்னை நகரில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த காவல்துறை அதிகாரிகள் வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.இன்னும் சில நாட்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின் உடனடியாக இந்த இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் ஆணையம் கூறியிருந்தது.
இதையடுத்து முதல் கட்டமாக சென்னை மாநகர காவல்துறையில் நீண்ட காலமாக பணியில் இருந்து வரும் சில அதிகாரிகள் வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மிகவும் நேர்மையான மற்றும் மிக ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர் என அழைக்கப்படும் தென் சென்னை இணை ஆணையர் சைலேந்திர பாபு, திருச்சி சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
போக்குவரத்து காவல் இணை ஆணையர் கே.சி.மாஹாளி, நெல்லை சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சைலேந்திரபாபு பொறுப்புக்கு மதுரை சரக டிஐஜி கருணாசாகரும், மாஹாளியின் பொறுப்புக்கு நெல்லை சரக டிஐஜி விஜயக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஆயுதப்படை டிஐஜி எம்.ரவி, சேலம் சரக டிஐஜியாகவும், சென்னை பயிற்சிப் பிரிவு ஐஜி ஜாபர் சேட், ஆயுதப்படை ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் முருகன், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராகவும், முருகன் வகித்த பொறுப்புக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கணேசமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றப்பட்ட மற்ற அதிகாரிகள்:
பாஸ்கரன் (திருவாரூர் எஸ்.பி.) - சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு
கலியமூர்த்தி (மயிலாப்பூர் துணை ஆணையர்) - பரங்கிமலை துணை ஆணையர்
தாமரைக்கண்ணன் (பரங்கிமலை து. ஆணையர்) - மயிலை துணை ஆணையர்.
சூடேஸ்வரன் - பூக்கடை துணை ஆணையர்
பிரேம் ஆனந்த் சின்ஹா - சென்னை போக்குவரத்து துணை ஆணையர்
இந் நிலையில், சென்னை மாநகர கமிஷ்னர் நட்ராஜ் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி அவரையும் மாற்றக் கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications