வைகோவை விட்டு விலகுகிறார் நாஞ்சில் சம்பத்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுகவிலிருந்து விரைவில் அக்கட்சியின் கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விலகக் கூடும் எனத் தெரிகிறது.

திமுக கூட்டணியில் தங்களுக்கு கெளரவமான இடம் தர வேண்டும் என்று ஆரம்பம் முதலே மதிமுக கூறத் தொடங்கியது. தமிழகத்தின் வட கோடி முதல் தென்கோடி வரை கிளைகள் உள்ள கட்சி தங்களது கட்சி, கடந்த 12 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை மதிமுக அடைந்துள்ளது.

எனவே பாமகவுக்கு சமமாக தாங்களும் மதிக்கப்பட வேண்டும் என்று மதிமுக தலைவர்கள் பேசத் தொடங்கினர்.

மெதுவாக ஆரம்பித்த இந்த பேச்சுக்கள் படு சூடாகி, கூட்டணியிலிருந்து மதிமுக விலகக் கூடிய சூழ்நிலை உருவாகும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது. இந்தக் கால கட்டங்களில் மதிமுகவின் எண்ணத்தை படு சூடாக வெளிப்படுத்தி வந்தவர்தான் நாஞ்சில் சம்பத்.

வைகோவின் மனசாட்சி, வைகோவின் நிழல் என்று வர்ணிக்கப்படும் நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கள், திமுக தரப்பில் பெரும் சூட்டைக் கிளப்பியது.

வைகோ கை காட்டுபவர்தான் அடுத்த முதல்வர், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதிமுகதான் எதிர்க்கட்சியாக அமரும், மதிகவுக்கு உரிய கெளரவம் கொடுக்காவிட்டால் தனித்துப் போட்டியிட நாங்கள் முட்டாள்கள் இல்லை, அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிடுவோம் என்றெல்லாம் சூடாக பேசி வந்தார் சம்பத்.

சம்பத்தின் பேச்சுக்களுக்கு ஆரம்பத்தில் வைகோ மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக மெளனம் காத்தார். மதிமுகவின் போக்கை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த திமுக, வைகோ பெருத்த அமைதி காத்து வந்ததால் கோபமடைந்து கொந்தளித்தது.

ஆற்காடு வீராசாமியை விட்டு அறிக்கை விட வைத்தார் கருணாநிதி.

சுதாரித்துக் கொண்ட வைகோ, நாஞ்சில் சம்பத் பேசியவை கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவை, மதிமுக, திமுக அணியில்தான் நீடிக்கும் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வைகோவின் இந்த அதிரடி அறிவிப்பால் வைகோவைத் தவிர மற்ற தலைவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து மெளனத்தில் உறைந்துள்ளனர். குறிப்பாக சம்பத் மிகவும் நொந்து போயுள்ளாராம்.

மதிமுக ஆரம்பிக்கப்பட்ட புதிதில் அக்கட்சியின் அனல் பறக்கும் பேச்சாளர்களில் ஒருவராக உருவானவர் சம்பத். அவருடன் சேர்ந்து அப்போது மதிமுக மேடைகளைக் கலக்கி வந்தவர்கள் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், நடிகை சி.ஆர்.சரஸ்வதி, அழகு சுந்தரம், சபாபதி மோகன், பாவாணன்.

இவர்களில் எஸ்.எஸ்.சந்திரனும், சி.ஆர்.சரஸ்வதியும் இப்போது அதிமுகவுக்குப் போய் பதவிகளை அனுபவித்து வருகின்றனர்.

பாவாணன் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பதால் சற்றே அடக்கி வைக்கப்பட்டுள்ளார்.

மற்ற மூன்று பேரான சம்பத், சபாபதி மோகன், அழகு சுந்தரம் ஆகியோர் மட்டுமே தற்போது மதிமுகவின் பிரச்சார பீரங்கிகளாக உள்ளனர்.

மூன்று பேரில் மிகச் சிறந்த பேச்சாளராக இருப்பவர் நாஞ்சில் சம்பத் மட்டும்தான். அவர் பேசும் கூட்டம் என்றால் தொண்டர்கள் கூட்டம் அலை மோதும்.

வைகோவைப் போல கூட்டத்தினரை பேச்சால் கட்டிப் போட்டு விடும் திறமை படைத்தவர் நாஞ்சில் சம்பத். மற்ற இருவரும் நடுத்தரமாக பேசக் கூடியவர்கள்.

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். மிகவும் சாதாரணமானவர் சம்பத். ஆடம்பர செலவுகள் வைக்காதவர். கட்சிக் கூட்டத்துக்கு பஸ்சில் போகக் கூடத் தயங்காதவர்.

அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பிடித்தமானவர். மதிமுகவே கதியென்று கிடப்பவர் சம்பத்.

இப்படிப்பட்ட சம்பத் தற்போது திமுக விவகாரத்தில் தன்னை கட்சி கைவிட்டு விட்டதாக உணர்கிறாராம். சம்பத்திடம் பேசவதைக் கூட வைகோ தவிர்த்து வருகிறார்.

போனில் கூட வைகோவுடன் பேச முடியாத நிலைக்கத் தள்ளப்பட்டார் சம்பத். இதனால் நொந்து போய் இருக்கும் சம்பத்தை அதிமுக தரப்பில் இழுக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் சிலர் இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனராம்.

வைகோவே தன்னை கைவிட்டு விட்டதாக உணர்வதால், திமுகவிடமிருந்து தனக்கு எந்தவித மரியாதையும் கிடைக்காது. தான் குளச்சல் தொகுதியில் போட்டியிட்டாலும் கூட திமுகவினர் தன்னைக் கவிழ்த்து விட்டு விடுவார்கள் என்ற எண்ணம் சம்பத்திடம் ஓடிக் கொண்டுள்ளதாம்.

இதனால் கட்சி மாறி விடும் எண்ணம் அவருக்கு தோன்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இருந்தாலும் வைகோவின் மீது தீவிரப் பற்று கொண்டவர் சம்பத் என்பதால் அவ்வளவு சீக்கிரம் இப்படிப்பட்ட முடிவை அவர் எடுத்து விட மாட்டார் என்றும் மதிமுக தரப்பு கூறுகிறது.

எத்தனையோ பிரச்சினைகளை அனாயசமாக சமாளித்தவர் வைகோ. சம்பத் பிரச்சினையையும் அவர் சமாளிப்பார் என்கிறார்கள்.

பார்ப்போம்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+