தமிழகத்தின் தலைமகள் ஜெ.: விஜயக்குமார்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதாவே மீண்டும் முதல்வர் ஆவார் என்று சமீபத்தில் அதிமுகவில் 3வது முறையாக சேர்ந்துள்ள நடிகர் விஜயக்குமார் கூறியுள்ளார்.
ரஜினியின் நெருங்கிய நண்பரான விஜயக்குமார் மீண்டும் அதிமுகவில் சேர்ந்த பின்னர் முதல் முறையாக சென்னை ராயபுரத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசினார்.எழுதி வைத்து பேசிய விஜயக்குமார், எனக்கு மேடைகளில் சரியாக பேச வராது. எனவே தவறாக பேசினால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டுத் தொடர்ந்தார்.
13 நாட்களுக்கு முன்புதான் நான் கட்சியில் சேர்ந்தேன். இப்போது முதல் முறையாக மேடை ஏறியுள்ளேன். அதுவும் அம்மாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் இது. எனக்குப் பெருமையாக உள்ளது.
முதல்வர் அம்மா அவர்கள், தமிழகத்தின் தலைமகளாக விளங்குகிறார். தமிழகம் இன்று அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. அவரை யாராலும் வீழ்த்த முடியாது. திமுக கூட்டணியில் 7 கட்சிகள் உள்ளது என்று பயமுறுத்துகிறார்கள். 7 என்ன, 70 கட்சிகள் இருந்தாலும் கூட அம்மாவை வீழ்த்த அவர்களால் முடியவே முடியாது. வரும் தேர்தலில் அதிமுகதான் ஜெயிக்கும், அடுத்த முதல்வரும் அம்மாதான்.
காமராஜரோடு காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விட்டது. இப்போது அது பல கோஷ்டிகள் இணைந்த ஒரு கூடாரம். மதிமுக, பாமகவுக்கு அரசியல் வாழ்வு, எதிர்காலம், அங்கீகாரம் கொடுத்தவர் அம்மாதான். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அவர்கள் இன்று வரை அரசியலில் நீடிக்க முடிகிறது. இல்லையென்றால் எப்போதோ காணாமல் போயிருப்பார்கள் என்றார் விஜயக்குமார்.












Click it and Unblock the Notifications