புஷ்சுக்கு எதிராக திமுக எம்பிக்கள் தர்ணா: பிரதமரிடம் அமெரிக்க வீரர்கள் சோதனை?
டெல்லி:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சின் வருகையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் இடதுசாரிக் கட்சிகள் இன்று பெரும்அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து மக்களவையும் மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டன.
அமெரிக்காவில் இருந்து நேற்றிரவு டெல்லி வந்த புஷ், வழியில் திடீரென ஆப்கானிஸ்தான் சென்றார்.தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் அவரது பயணம் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய புஷ்சுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.சம்பிரதாயங்களை உடைத்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்கே தனது மனைவியுடன் நேரடியாக விமானநிலையம் வந்து புஷ்ஷையும் அவரது மனைவியையும் வரவேற்றார்.
மாளிகை, குதிரைகளை ரசித்த புஷ்:
இதன் பின் நேற்றிரவு மெளரியா ஷெரட்டன் ஹோட்டலில் தங்கிய புஷ்சுக்கு இன்று காலை ஜனாதிபதிமாளிகையில் 21 குண்டுகள் முழங்க சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி கலாம், பிரதமர் மன்மோகன், அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் அவரை வரவேற்றனர்.
முப்படைகளின் வண்ணமிகு வரவேற்பைப் பார்வையிட்ட புஷ், பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் உலகில் பலநாடுகளில் ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டுள்ளேன். ஆனால், இன்று பார்த்தது போல மிகச் சிறந்தஅணிவகுப்பை நான் வேறு எங்கும் பார்த்தலில்லை என்றார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகை பாதுகாவலர்களின் குதிரைகளை மிக ஆச்சரியத்துடன் பார்த்த புஷ், இவ்வளவுஅழகிய குதிரைகளா என்று ஆச்சரியம் காட்டினார்.
டெக்ஸாசில் உள்ள தனது பண்ணை இல்லத்தில் பெரிய குதிரைப் பண்ணை வைத்துள்ள புஷ், மிகப் பெரியகுதிரைப் பிரியராவார்.
ஜனாதிபதி மாளிகையின் அழகையும் மிகவும் ஆச்சரியத்துடன் ரசித்த புஷ் பின்னர் மன்மோகன் சிங்கிடம் தனக்குஇவ்வளவு சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அணு ஒப்பந்த சிக்கல்:
இதற்கிடையே இந்திய அணு உலைகளை சர்வதேச அணு சக்திக் களகத்தின் மேற்பார்வையில் கொண்டு வருவதுதொடர்பாக அமெரிக்க-இந்திய அதிகாரிகளிடையே நேற்றிரவும் இன்றும் தொடர்ந்து ஆலோசனை நடந்துவருகிறது.
இந்திய ராணுவத்துக்கு உதவும் அணு ஆராய்ச்சிக் கழகத்தின் அணு உலைகளை சர்வதேச கண்காணிப்பில்கொண்டு வர இந்தியா தயாராக இல்லை. ஆனால், அமெரிக்காவே எல்லா அணு உலைகளையும் சர்வதேசகண்காணிப்பின் கீழ் கொண்டு வரக் கோரி வருகிறது. இதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
மகாத்மாவின் சமாதியில்..:
ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு முடிந்த பின் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் சமாதியில் அஞ்சலிசெலுத்திய புஷ் பின்னர் ஹைதராபாத் ஹவுஸ் மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனைகளில்ஈடுபட்டார்.
இந் நிலையில் புஷ்சின் வருகையை எதிர்த்து இன்றும் நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களைநடத்தி வருகின்றன.
நேற்று சென்னை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்பட பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.
திமுக எம்பிக்கள் தர்ணா:
இந் நிலையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், வேண்டாத விருந்தாளி புஷ்ஷை அழைத்தது ஏன் என்றுகேட்டு இடதுசாரி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையையும் மாநிலங்களவையையும் நடத்தவிடாமல் தடுத்தனர். இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இதையடுத்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, மதசார்பற்ற ஜனதா தளம், ஆர்எஸ்பி, பார்வர்ட்பிளாக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே தர்ணா போராட்டத்தில்ஈடுபட்டனர். மரபுகளை உடைத்துக் கொண்டு மன்மோகன் சிங்கே ஏன் விமான நிலையம் சென்று புஷ்ஷைவரவேற்றார் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அதே போல திமுக, தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் இந்த தர்ணாவில் கலந்து கொண்டனர். இராக்கில்அமெரிக்கப் படைகள் நுழைந்தது, இராக்கியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை எதிர்த்து இந்தப்போராட்டத்தில் பங்கேற்பதாக திமுக எம்பிக்கள் கூறினர்.
மாபெரும் எதிர்ப்புப் பேரணி:
இதையடுத்து புஷ் எதிர்ப்புப் பேரணியில் இடதுசாரிக் கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர். ராம்லீலாமைதானத்தில் இருந்து கிளம்பிய இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணிநாடாளுமன்றம் அருகே முடிவடைந்தது.
மேலும் நாட்டின் பிற பகுதிகளிலும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் முஸ்லீம் அமைப்புகளும் புஷ் எதிர்ப்புப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நாளை ஹைதராபாத் செல்லும் புஷ்சைக் கண்டித்து அங்கும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கராச்சியில் குண்டுவெடிப்பு:
புஷ்ஷின் வருகையையொட்டி தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தக் கூடும் என்ற அச்சம் நிலவுவதால்நாடு முழுவதுமே கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் செல்ல இருக்கிறார் புஷ். இந் நிலையில் கராச்சி நகரில்அமெரிக்கத் தூதரகம் அருகே இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 2 பேர் பலியாயினர். இதையடுத்துஇந்தியாவில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமரிடம் சோதனையா?
முன்னதாக நேற்றிரவு புஷ்ஷை வரவேற்கச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கை அமெரிக்க பாதுகாப்புப்படையினர் சோதனையிட்டதாக செய்திகள் வருகின்றன. ஆனால், இதை பிரதமரின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய்பரூவா மறுத்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணாண்டசை வாஷிங்டன் விமான நிலையத்தில் சட்டையைக் கழற்றச்சொல்லி சோதனையிட்டவர்கள் அமெரிக்கர்கள் என்பது நினைவுகூறத்தக்கது.
இந்திய மாம்பழங்களுக்கு தடை நீக்கம்:
இதற்கிடையே இன்று பிரதமருக்கும் ஜார்ஜ் புஷ்சுக்கும் இடையே நடந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இந்தியமாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இந்திய மாம்பழங்களில்பூச்சி மருந்துகள் தெளிக்கப்படுவதாகக் கூறி அதற்கு அமெரிக்காவில் தடை இருந்து வருகிறது.
திருச்சியில் கொடும்பாவி:
இந் நிலையில் திருச்சியில் அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் புஷ்சின்கொடும்பாவியை எரிக்க முயன்று கைதாகினர். சிமோன் செல்வராஜ் தலைமையிலான அந்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
65 நாய் அதிகாரிகள்:
அதிபர் புஷ்சுடன் இந்தியாவுக்கு நூற்றுக்கணக்கான காமோண்டாக்களும் அதிகாரிகளும் வந்துள்ள நிலையில் 65 மோப்ப நாய்களும் வந்துள்ளன.இவையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நாய்களை புஷ்சுடன் வந்துள்ள அமெரிக்கர்கள் அதிகாரிகள் என்றே குறிப்பிடுகின்றனர். இந்த நாய்களுக்கு டெல்லி லீமெரிடியன் ஹோட்டலில் ரூம்கள் புக் செய்யப்பட்டுள்ளது. முதலில் இந்த அதிகாரிகளுக்கு ரூம் தர ஹோட்டல்நிர்வாகம் மறுத்தது. மத்திய அரசு நெருக்குதல் தந்ததையடுத்து வேறு வழியில்லாமல் நாய்களுக்கு ரூம்கள்தரப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications