கிருஷ்ணசாமி விரும்பும் மரியாதை கூட்டணி
சென்னை:
மரியாதை தரும் கட்சியுடன்தான் நாங்கள் கூட்டணி வைப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
திருமாவளவனைத் தொடர்ந்து கிருஷ்ணசாமியும் அதிமுகவுக்குச் செல்ல பல வழிகளிலும் முயன்று வருகிறார்.இருப்பினும் வைகோ மற்றும் இடதுசாரிக் கட்சிகள் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் அதிமுக உள்ளதால், கிருஷ்ணசாமியை கூட்டணிக்கு அழைப்பதில் தாமதம் காட்டி வருகிறது.
எதற்கும் இருக்கட்டும் என்று கிருஷ்ணசாமி தரப்புடன் வேறு இன்-டைரக்ட் சேனல்கள் மூலம் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டுள்ளது அதிமுக.
இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில், நாங்கள் 150 தொகுதிகளில் போட்டியிடுவது என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளோம்.
இருப்பினும் அதிமுகவுடன் கூட்டணி சேருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ளன. நேரடியாக அவர்கள் அழைக்கவில்லை என்றாலும் கூட பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து கூட அழைப்பு வந்தது. 3வது அணி அமைப்பது குறித்து தேசிய கட்சி ஒன்று எங்களுடன் பேசியுள்ளது.
எங்களை மதித்து, மரியாதை கொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம். சுயமரியாதை எங்களுக்கு முக்கியம். தலித் மக்கள் ஓரணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
திமுக கூட்டணி தலித் கட்சிகளை கைவிட்டு விட்டது.
திருமாவளவன் தமிழ் தலித் உரிமை என்ற அளவில் விலகிச் சென்று விட்டார். நான் தேசிய அளவில் தலித் உரிமைக்காகப் போராடி வருகிறேன். மற்றபடி இருவருக்குள்ளும் எந்தவித சண்டையும் இல்லை.
திருமணம் மட்டும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. தேர்தல் கூட்டணிகளும் கூட சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன என்று பஞ்ச் டயலாக் அடித்து முடித்தார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications