சோனியா இன்று திருச்சி வருகை
திருச்சி:
திருச்சியில் இன்று நிறைவு பெறும் திமுக மாநில மாநாட்டில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகிறார்.
திருச்சியில் கோலகலமாக தொடங்கிய மாநாட்டின் 2வது நாளான நேற்று பெரும் சோகம் குடி கொண்டது. வைகோ திமுக கூட்டணியிலிருந்து விலகியது கட்சித் தலைவர் கருணாநிதி முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை பெரும் வருத்தத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி விட்டது.இன்று 3வது நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உரையாற்றுகின்றனர். முத்தாய்ப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரை நிகழ்த்துகிறார்.
இறுதியாக திமுக தலைவர் கருணாநிதி நிறைவுரையாற்றுகிறார்.
திமுக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சோனியா காந்தி இன்று மாலை தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார்.
சோனியா காந்தி பேசுவதற்காக குண்டு துளைக்காத தனி கூண்டு மேடை தயார் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் பேச்சுக்குப் பிறகே சோனியா காந்தி டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
சோனியாவின் வருகையையொட்டி மாநாட்டு வளாகத்திலும், விமான நிலையத்திலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நண்பர்களிடம் தோற்ற கருணாநிதி:
இதற்கிடையே, நண்பர்களிடம் தோற்பது கருணாநிதிக்குப் புதிதல்ல. ஆனால் என்றைக்குமே அவர் எதிரிகளிடம் தோற்றதில்லை என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
வைகோ விலகல் எதிரொலியாக, திமுக மாநாட்டில் பேசிய அனைவரும் வைகோவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கிப் பேசினார்கள்.
அனைத்துப் பேச்சாளர்களும் ஆத்திரத்துடன், கோபத்துடன் பேச, பொதுச் செயலாளர் அன்பழகன் பக்குவமாகவும், நிதானமாகவும் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
அன்பழகன் பேசுகையில், இன்றைக்கு வந்த செய்தி (அதிமுக-மதிமுக கூட்டணி) ஒரு சாதாரண செய்திதான்.
அதை செய்தியாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், மதிக்கத் தேவையில்லை.
கலைஞர் நண்பர்களிடம்தான் தோல்வி அடைந்துள்ளார், ஆனால் ஒருபோதும் எதிரிகளிடம் தோற்றதில்லை.
ஐந்தாவது முறையாக கலைஞரை ஆட்சிப் பீடத்தில் அமர்த்திப் பார்க்க வேண்டும் என்று பொன்முடி சொன்னார்.
அது தவறு, ஆட்சி பீடத்தில் இருப்பவர்களை அகற்ற வேண்டும் என்றுதான் கூற வேண்டும்.
இந்தக் கூட்டணிக்கு வலு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை, காரணம் வலு சேர்ந்து 6 மாதம் ஆகி விட்டது. இந்த அணி வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் எப்போதோ முடிவெடுத்து விட்டார்கள் என்றார் அன்பழகன்.
ஆற்காடு வீராசாமி பேசுகையில், ஒருமுறை கூட தேர்தலில் தோற்காதவர் கலைஞர். அண்ணா கூட காஞ்சிபுரத்தில் ஒருமுறை தோல்வி கண்டவர். கலைஞருக்குத் துரோகம் நினைப்பவர்கள் காணாமல்போய் விடுவார்கள் என்றார்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், தலைவருக்கு ஒரு கோரிக்கை வைக்க ஆசைப்படுகிறேன். நம்மிடமிருந்து தொலைந்து போனவர்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் திரும்ப நம்மிடமே வந்தால், அவர்களை கண்ணே, மணியே, அமுதே என்று கொஞ்சிக் கொண்டு வரவேற்காதீர்கள்.
நமக்கு நமது சுயமரியாதை முக்கியம். நீங்கள் எங்களுக்கு வழி காட்டுங்கள், கட்டளை இடுங்கள், அதை செய்து முடிக்கிறோம் என்றார் ஆவேசமாக.












Click it and Unblock the Notifications