திமுக கூட்டணியில் காங்-42, பாமக-30, மார்க்சிஸ்ட்-11, இ.கம்யூ10 தொகுதிகள்?
சென்னை:
திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகள் முடிவாகி விட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.கூட்டணியிலிருந்து மதிமுக விலகி விட்டதால், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு எளிதாகிவிட்டது. மதிமுக விலகியதால் மிஞ்சியிருக்கும் 23 இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு போட்டுத் தந்து அவர்களை சந்தோஷப்படுத்தவும் திமுகவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 42 தொகுதிகளும், பாமகவுக்கு 30 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நல்லகண்ணு, தா.பாண்டியன், மகேந்திரன் ஆகியோரும் திமுக சார்பில் கருணாநிதி தவிர ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், ஸ்டாலின் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஓரிரு நாளில் பங்கீடு: இ.கம்யூ.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியே வந்த தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதிகள் டிவாகி விடும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் இன்று கருணாநிதி ஆலோசனை நடத்துகிறார்.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 10 தொகுதிகளை முதலில் கேட்டு வந்தன. ஆனால், இருவருக்கும் தலா 8 தொகுதிகளைத் தர கருணாநிதி திட்டமிட்டார்.
ஆனால், தற்போது மதிமுக விலகியுள்ளதால், கூடுதலாக தலா 5 தொகுதிகளை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேட்கின்றன. இருந்தாலும் இரு கட்சிகளுக்கும் தலா 11, 10 தலா என தொகுதிகளே தரப்படலாம் எனத் தெரிகிறது.
அதே போல காங்கிரசுக்கான இடங்கள் குறித்து திருச்சிக்கு வந்த சோனியா காந்தியுடன் கருணாநிதியே நேரடியாகப் பேசி முடித்துவிட்டார். அதே போல பாமகவுடன் துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிட்டது.
நாளை பாமகவுடன் கருணாநிதி நேரடியாக பேசுகிறார்.
இவர்கள் தவிர ராஜ கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகம் ஆகிய கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கப்படுகிறது. இவர்களுக்கு தலா ஒன்று முதல் 2 தொகுதிகள் வரை கிடைக்கக் கூடும் எனத் தெரிகிறது.
இன்னும் ஒரிரு நாட்களில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகளின் எண்ணிக்கை விவரத்தை வெளியிட்டுவிட்டு சட்டு புட்டென்று பிரச்சாரத்தில் இறங்க கருணநிதி முடிவு செய்துள்ளார்.
புதுவையில் காங். தனித்து போட்டி?
இதற்கிடையே பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட அனுமதிக்குமாறு சோனியா காந்திக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான ப.சண்முகம் கூறியுள்ளார்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுவையில் உள்ள 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என காங்கிரஸார் விரும்புகிறார்கள். காங்கிரஸ் கட்சியினரின் எண்ணத்தை கட்சி மேலிடத்திற்குத் தெரிவித்துள்ளோம். தனித்துப் போட்டியிட அனுமதி தருமாறு சோனியா காந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
தனித்துப் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மை பெறுவதற்குத் தேவையான பலத்துடன் காங்கிரஸ் கட்சி உள்ளது. தொடர்ந்து மக்களுக்கு நல்லாட்சி தந்து வருகிறோம் என்றார் சண்முகம்.












Click it and Unblock the Notifications