அனைத்து ஜாதி அர்ச்சகர்-அர்ச்சகர்கள் எதிர்ப்பு
கடலூர் - கோவை:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு தமிழ்நாடு அர்ச்சர்கள் சமூக நலச்சங்கம் எதிர்ப்புத்தெரிவித்துள்ளது.
அதன் மாநிலத் தலைவர் அருணாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆகமத்தில் கூறியுள்ளவாறு ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டு அந்தந்த ஆலய வழக்கங்களின்படி ஆகமவிதிமுறைகளுக்கு உட்பட்டு வழிபாடுகள் நடக்கின்றன. இதில் தலையிட்டு ஆகம கோட்பாடுகளுக்கும்வழிவழியாக நடந்து வரும் நடைமுறைகளுக்கும் மாறாக உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் கிடையாது.
இந்த உத்தரவு அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
பெண் அர்ச்சகர்கள்: உமாபாரதி கோரிக்கை
இந் நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவு பாராட்டுக்குரியது என்று பாரதிய ஜன சக்தி தலைவர் உமாபாரதி கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்து விலகி தனிக் கட்சி கண்டுள்ள உமா பாரதி ராமேஸ்வரத்திலிருந்து உத்தராஞ்சல் மாநிலம் கேதார்நாத் வரை வேன் மூலம் யாத்திரைமேற்கொண்டுள்ளார்.
வழியில் கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக முதல்வர் கருணாநிதி 3 முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். அவை அனைத்தையும் நான் பாராட்டுகிறேன்.
குறிப்பாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக பணியாற்றலாம் என்ற உத்தரவு பாராட்டுக்குரியது.
அர்ச்சகர் என்பது ஜாதியை அடிப்படையாக வைத்து வருவது அல்ல, அது ஒரு ஒழுக்க நெறிமுறைகள் சம்பந்தப்பட்டது. ஒழுக்க நெறிமுறைகள் கொண்டயாருமே அர்ச்சகர்களாக பணியாற்றலாம்.
அதேபோல பெண்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும். அவர்களும் அர்ச்சர்களாக செயல்பட முடியும். இதை முதல்வர் கருணாநிதிக்கு தனிப்பட்டமுறையில் கோரிக்கையாக வைக்க விரும்புகிறேன் என்றார் உமாபாரதி.












Click it and Unblock the Notifications