கட்டாக்கில் சேப்பல் மீது அட்டாக்!
கட்டாக்:இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒரு நாள் போட்டிக்காக கட்டாக் நகருக்கு வந்த இந்தியஅணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பலை மர்ம ஆசாமி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி கட்டாக் நகரில் 24ம் தேதி நடைபெறுகிறது.
இதற்காக கட்டாக் நகருக்கு இந்திய அணி வீரர்கள் இன்று பிற்பகல் வந்தனர். அவர்களுடன் கிரேக் சேப்பலும் உடன் வந்தார்.பின்னர் வீரர்களும், சேப்பலும் ஹோட்டலுக்குச் செல்ல பேருந்தில் ஏற வந்தனர்.
அப்போது பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள் மத்தியில் நின்றிருந்த ஒரு ஆசாமி, திடீரென சேப்பல் மீது பாய்ந்தார். ஏன்ஒரிஸ்ஸா மாநில வீரர்களை அணியில் சேர்பப்தில்லை என்று ஆவேசமாக கேட்ட அவர் கிரிக்கெட் வாரியத்தைக் கண்டித்துகோஷமிட்டார். மேலும் சேப்பலையும் அவர் தாக்கினார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீஸார் அந்த நபரை பாய்ந்து மடக்கிப் பிடித்து அங்கிருந்துஅப்புறப்படுத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் கலிங்க சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர் அந்த நபர் எனத் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து சேப்பல் கருத்து கூற மறுத்து விட்டார். பின்னர் சேப்பலும், வீரர்களும் பத்திரமாக அங்கிருந்து கிளம்பிச்சென்றனர்.
கட்டாக்கில் இந்திய வீரர்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என ஏற்கனவே மத்திய உளவுத்துறை ஒரிஸ்ஸாபோலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்திய மற்றும் மேற்கு இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு பன்மடங்குஅதிகரிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் சேப்பல் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே.இ தீவுகளை வென்ற இந்தியா:
இந் நிலையில் நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நாக்பூரில் நடந்த ஒரு நாள் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணிவெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும், இந்தியாவுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நாக்பூரில் நடந்தது. டாஸ் வென்றமேற்கு இந்தியத் தீவுகள் அணி கேப்டன் லாரா, இந்தியாவை பேட் செய்யப் பணித்தார்.
இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களா களம் இறங்கிய கங்குலியும், காம்பீரும் பந்துவீச்சை பிரித்து மேய்ந்து ரன்களைக் குவிக்கத் தொடங்கினர்.இருவரும் இணைந்து 144 ரன்களை குவித்தனர். அட்டகாசமாக ஆடிக் கொண்டிருந்த காம்பீர் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறு முனையில் கங்குலி தொடர்ந்து அபாரமாக ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில்தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
சச்சின் டெண்டுல்கர் மீண்டும் ஒரு ஏமாற்றமான ஆட்டத்தைக் காட்டினார். 31 ரன்கள் எடுத்து கெய்ல் பந்தில் வெளியேறினார். இவர்களைத் தொடர்ந்துவந்த டிராவிடும், தோணியும் அட்டகாசமாக ஆடி இந்தியாவின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர்.
வழக்கமாக கட்டையைப் போடும் டிராவிட் நேற்று அதிரடி ஆட்டத்தில் குதித்தார். அவருடன் டோணியும் சேர்ந்து பந்துகளை சிக்ஸருக்கும்,பவுண்டரிகளுக்கும் மாறி மாறி விரட்டினர்.
42 பந்துகளைச் சந்தித்த டோணி 62 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்சர்களும் அடங்கும். டிராவிட் 35 பந்துகளை மடடுமே சந்தித்து 54 ரன்களை எடுத்தார்.அவர் பங்குக்கு 3 சிக்சர்கள்.
கடைசி 11.5 ஓவர்களில் மட்டும் இருவரும் இணைந்து 119 ரன்களை குவித்து அணியின் ஸ்கோர் 338ஆக உயர உதவினர்.
பின்னர் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் பந்திலிருந்தே போராட்டத்தை வலுவாக தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் கெயிலும், சந்தர்பாலும் அற்புதமாக ஆடி வலுவான அடித்தளம் அமைத்தனர். கெய்ல் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பஜன்சிங் பந்தில் வீழ்ந்தார்.
ஆனால் சந்தர்பால் தொடர்ந்து நிதானமாக ஆடி வந்தார். மறு முனையில் பேட்ஸ்மென்கள் வருவதும் போவதுமாக இருந்தது. மோர்டன் மட்டும்நிலைத்து ஆடி 40ரன்களைச் சேர்த்தார். ரன் மெஷின் லாரா 31 ரன்களும், பிரேவா 16 ரன்களும் எடுத்தனர்.
ஆனால் சந்தர்பால் மட்டும் நிலைத்து ஆடி வெற்றி இலக்கை நோக்கி அணியை மெதுவாக கொண்டு சென்றார். இருப்பினும் மற்ற வீரர்கள் விரைவில்அவுட் ஆகி வந்ததால் 324 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்து 14 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தோல்வியை நழுவ விட்டது.
சந்தர்பால் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 149 ரன்கள் எடுத்தார். அபாரமாக ஆடிய சந்தர்பாலுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி கட்டாக் நகரில் 24ம் தேதி நடைபெறுகிறது.
இந்தியாவில் ஒரே போட்டியில் அதிக அளவிலான ரன்கள் எடுக்கப்பட்ட சாதனையை நாக்பூர் போட்டி படைத்துள்ளது. இப்போட்டியில் இரு அணிகளும்சேர்ந்து மொத்தமாக 662 ரன்களைக் குவித்தன.












Click it and Unblock the Notifications