குமரி மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கி சூடு
நாகர்கோவில்:
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை நீண்ட காலமாக சுட்டு வந்த இலங்கை கடற்படையின் வெறிப் போக்குக்குக் கடும் கண்டனம் எழுந்து. தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும், பொது நல அமைப்புகளும் இந்த சம்பவங்களை கடுமையாக கண்டித்துள்ளன.
இதனால் கடந்த சில வாரங்களாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீ்து இலங்கை கடற்படை தனது கவனத்தைக் குறைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு இலங்கை கடற்படை வீரர்கள் விரட்டியடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
குமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த இரவிபுத்தன் துறையை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 17ம் தேதி விசைப்படகு மூலம் மீன் பிடிக்க சென்றனர்.
25ம் தேதி இரவிபுத்தன் துறையில் இருந்து 64 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
இதை பார்த்த மீனவர்கள் படகை அவசர அவசரமாக கரைக்கு திருப்பினர்.தப்பி ஓடிய தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பயந்து போன மீனவர்கள் நடுக்கடலிலேயே படகை நிறுத்தினர். இதையடுத்து கடற்படையினர் மீனவர்களையும், படகையும் சிறைபிடித்தனர்.
பின்னர் கிரேசிஸ் என்ற மீனவரை மட்டும் கடற்படையினர் அவர்களது படகில் ஏற்றி சரமாரியாக தாக்கினர். இதையடுத்து மீனவர்கள் இனி நாங்கள் இந்த பக்கம் மீன் பிடிக்க வரமாட்டோம் என கெஞ்சி கேட்டதால் அவர்கள் மீனவர்களை விடுவித்தனர்.
கரை திரும்பிய மீனவர்கள் நடுக்கடலில் நடந்த சம்பவம் குறித்து ஊர் மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். மேலும் நித்திரவிளை காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.
ராமநாதபுரம் மீனவர்களிடம் ராவடி செய்து கொண்டிருந்த இலங்கை கடற்படை தனது கவனத்தை தற்போது குமரி பக்கம் திருப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications