போட்றா வெடிய.. ஜூலை 24ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரிட்டன் வினியோகஸ்தர்
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படத்திற்கு இந்தியாவில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், பிரிட்டன் நாட்டில் படம் எந்தக் காட்சியும் நீக்கப்படாமல் முழுமையாக வெளியாகவுள்ளதாக அந்நாட்டு விநியோக நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், வரும் ஜூலை 24ம் தேதி படம் ரிலீஸாகும் என்று பிரிட்டனில் விநியோக உரிமையைப் பெற்றுள்ள அஹிம்சா என்டர்டெயின்மென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ஜனநாயகன் படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்தது. தமிழ்நாடு தேர்தலுக்கு முன்பு விஜய்யின் கடைசி படமாக மாபெரும் கொண்டாட்டமாக ஜனநாயகன் இறுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் பல மாதங்கள் படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கியது.

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது?
ஒரு வழியாக சென்சார் பஞ்சாயத்து எல்லாம் முடிந்த நிலையில், படம் எப்போது வெளியாகும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. படத்தை தயாரித்துள்ள கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் இதுவரை பட ரிலீஸ் தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், படத்தின் பிரிட்டன் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள அஹிம்சா என்டர்டெயின்மென்ட், ஜனநாயகன் படம் ஜூலை 24ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள், "தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் ஜூலை 24 முதல் இங்கிலாந்து திரையரங்குகளில் வெளியாகிறது. 15 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கலாம் என்ற சான்றிதழுடன், எந்தக் காட்சியும் வெட்டப்படாமல் முழுமையாகப் படம் திரையிடப்படும். அனைத்து ஆக்ஷனும், மாஸும், கொண்டாட்டமும் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளனர்.
இந்தியாவில் படத்திற்கு முன்பே குறிப்பிட்டது போல சென்சார் சான்றிதழ் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. கடந்த ஜூலை 9ஆம் தேதி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தின் மொத்த நீளம் 183 நிமிடங்கள் 11 விநாடிகள் (3 மணி 3 நிமிடங்கள்) உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தில் நீக்கப்பட்ட கட்சிகள் குறித்த தகவல்களும் வெளியானது.
டிவிகே வசனம்
சென்சார் வாரியம் படத்தில் மொத்தம் 12 மாற்றங்களை செய்யத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இடம்பெறும் புத்தக அட்டைப் படம் மாற்றப்பட்டதுடன், "அம்பேத்கர்... டிவிகே சட்டம்" என வரும் வசனம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் "TVK" என்ற வார்த்தை இடம்பெறும் சில காட்சிகள் மற்றும் ஆடியோ மியூட் செய்யப்பட்டுள்ளன.
மாற்றம்
இந்திய தேசிய கொடி இடம்பெறும் ஒரு காட்சியை நீக்கவும், "பாகவதன்", "ரங்கநாதர்" உள்ளிட்ட சில வார்த்தைகள் மற்றும் சில ஆபாச சொற்களை மியூட் செய்யவும் வாரியம் உத்தரவிட்டுள்ளது. படத்தில் இருக்கும் 'ஆபரேஷன் மெலுஹா' தொடர்பான வசனங்களில் வரும் "ஓம்" என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதுடன், சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதை குறிப்பிடும் வசனமும் மாற்றப்பட்டுள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜூலை 24-ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம், விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
