கங்குலிக்கு ரசிகர்கள் ராஜ வரவேற்பு
கொல்கத்தா:உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியுடன் திரும்பியதால் ரசிகர்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில், கொல்கத்தாவுக்குத் திரும்பிய சவுரவ் கங்குலிக்கு அங்குள்ள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
உலகக் கோப்பைப் போட்டியில் முதல் சுற்றிலேயே கவிழ்ந்தடித்து ஊர் திரும்பியுள்ளனர் இந்திய வீரர்கள். ரசிகர்களிடம் சிக்கி விடக் கூடாது என்பதற்காக ராவோடு ராவாக இந்திய வீரர்கள் ஊர் திரும்பினர்.
ஆனால் கங்குலி விவகாரத்தில் இது தலைகீழாக இருந்தது. கங்குலி இன்றுதான் கொல்கத்தா திரும்பினார். அனைத்து வீரர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் நிலவி வரும் நிலையில், கொல்கததா ரசிகர்கள் மட்டும் கங்குலிக்கு ராஜ வரவேற்பு கொடுத்தனர்.
விமான நிலையத்தில் இன்று அதிகாலையே அதிக அளவில் ரசிகர்கள் கூடிவிட்டனர். லண்டனிலிருந்து இன்று காலை 5 மணிக்கு கங்குலி கொல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தார்.
அவரை விமான நிலையத்தில் பெரும் திரளான ரசிகர்கள் கூடி செளரவ், செளரவ் என்று கோஷமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்த கங்குலி, பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து காரில் ஏற்றப்பட்டு தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கங்குலி வருகையையொட்டி கொல்கத்தா விமான நிலையத்திலும், கங்குலி வீட்டிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீட்டுக்குச் சென்ற கங்குலி, அங்கு காத்திருந்த புகைப்படக்காரர்களுக்கு சில விநாடிகள் போஸ் கொடுத்து விட்டு வீட்டுக்குள் போனார்.
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் ரன் அள்ளாமல், மண்ணைக் கவ்விய நிலையில், கங்குலி மட்டுமே சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications