உயிர் கொடுத்து இட ஒதுக்கீட்டைக் காப்போம் ராமதாஸ்
சென்னைஉயிரைக் கொடுத்தாவது பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் காப்போம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
27 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைக் கண்டித்து இன்று பாமக சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் நடந்தது. ராமதாஸ் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
சென்னையில், மெமோரியல் ஹால் அருகே நடந்த போராட்டத்தில் பாமகவினர் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர். ராமதாஸ் தலைமையில், இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு எதிரான தடையைக் கண்டித்து பாமகவினர் உரத்த குரலில் கோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இது ஒரு கருப்பு நாள். இந்த தீர்ப்பு மாற்றப்படும் வரை பாமகவினர் துக்கம் அனுசரிப்பார்கள்.
60 கோடி மக்கள் தொகை கொண்ட நாங்கள் (பிற்படுத்தப்பட்ட மக்கள்) வேறு வழியின்றி பொங்கி எழுந்துள்ளோம். தீர்ப்பு மாறும் வரை போராட்டம் தொடரும். எங்களது உயிரைக் கொடுத்தாவது இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றுவோம்.
நாடாளுமன்ற இரு அவைகளையும் கூட்டி இதுகுறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததற்காக முதல்வர் கருணாநிதியை நான் பாராட்டுகிறேன்.
5000 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள பிற்பபடுத்தப்பட்ட சமுதாயத்தினரை உயர்த்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை, வாக்கு வங்கிக்காக கொண்டு வரப்பட்ட சட்டம் என்று உச்சநீதிமன்றம் கூறுவது மிகுந்த வேதனை தருகிறது. இந்தத் தீர்ப்பு தவறானது, திருத்தப்பட வேண்டியது என்றார் ராமதாஸ்.
இதேபோல புதுவையிலும் பாமகவினர் அம்மாநில பாமக எம்.பி. ராமதாஸ் தலைமயில் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications