ஆஸ்திரேலியா அபாரம்: சுருண்டது வங்கதேசம்
செயின்ட் பீட்டர்ஸ் (ஆண்டிகுவா):ஆஸ்திரேலிய அணி தனது அபார பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கால் வங்கதேச அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய அணிக்கும், வங்கதேசத்திற்கும் இடையே ஆண்டிகுவாவில், நேற்று சூப்பர் 8 சுற்றுப் போட்டி நடந்தது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
![]() |
பின்னர் 22 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கியது.
முதலில் வங்கதேசமம் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் அபாரப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், வங்கதேச வீரர்கள் நிலைகுலைந்தனர்.
குறிப்பாக மெக்கிராத் பந்துகளை அவர்களால் அடிக்கவே முடியவில்லை. அபாரமாக பந்து வீசிய மெக்கிராத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கோப்பைப் போட்டியில் புதிய சாதனையையும் நிகழ்த்தினார்.
உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை அதிகபட்சமாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 55 விக்கெட்டுளை வீழ்த்தியிருந்தார். இந்த சாதனையை வங்கதேசப் போட்டியில் மெக்கிராத் முறியடித்து 57 விக்கெட்டுளை எடுத்து சாதனை படைத்தார்.
வங்கதேச அணி நிர்ணயக்கப்பட்ட 22 ஓவர்களில் 104 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் சகீபுல் ஹசன் 25 ரன்களும், கேப்டன் பாஷர் 24 ரன்களும், மொர்டஸா ஆட்டமிழக்காமல் 25 ரன்களும் எடுத்தனர். மொர்டஸா ஆட்டத்தில் மட்டும் பொறி பறந்தது.
பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி மின்னல் வேகத்தில் மட்டையைச் சுழற்றி வங்கதேச அணியை பயமுறுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கில்கிறைஸ்ட்டும், மாத்யூ ஹைடன் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர்.
13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டையும் இழக்காமல் 106 ரன்களை சேர்த்து ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. கில்கிறைஸ்ட் 59 ரன்களும், ஹைடன் 47 ரன்களும் எடுத்தனர். மெக்கிராத் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்றைய போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், இலங்கையும் மோதுகின்றன. இரண்டு சூப்பர் எட்டுப் போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தோற்றுள்ளதால் இனி வரும் போட்டிகளில் கண்டிப்பாக வென்றே ஆக வேண்டும் என்பதால் இன்றையப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி கண்டிப்பாக ஜெயிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.













Click it and Unblock the Notifications