எஸ்ஐ தேர்வு: வயிற்றுப் பிள்ளையோடு ஓடிய பெண்கள்
சென்னை:வயிற்றில் பிள்ளையோடு சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் பெண்கள் கலந்து கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பெண்களுக்கான சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நேற்று தொடங்கியது. சென்னையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்தத் தேர்வு நடந்தது.
810 பேர் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். அவ்ரகளில் 554 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
காலை 6 மணிக்கு தேர்வு தொடங்கியது. முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. பின்னர் உயரம் சரி பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடந்தது. இந்த தூரத்தை 2 நிமிடத்தில் கடக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பல பெண்கள் முதல் முதலாக ஓடியதால் ஓட முடியாமல் பாதியிலேயே மயங்கி விழுந்தனர். அவர்களை பெண் காவலர்கள் தண்ணீர் தெளித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சில கர்ப்பிணிப் பெண்களும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடியதுதான். கர்ப்பிணிப் பெண்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளக் கூடாது. இருந்தாலும் தடையை மீறி சில பெண்கள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லலிதா என்ற 7 மாத கர்ப்பிணியும், ஆதி லட்சுமி என்ற 8 மாத கர்ப்பிணியும் ஓட முடியாமல் ஓடினர். அதேபோல வனிதா என்ற கர்ப்பிணியும் ஓட முயன்றபோது போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி விட்டனர். அதேபோல லட்சுமி, லலிதாவையும் பாதியிலேயே ஓடிப் போய் தடுத்து நிறுத்தி விட்டனர்.
என்னால் ஓட முடியாவிட்டாலும் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களில் நடந்து கடக்கிறேன் என்று 9 மாத கர்ப்பிணி ஒருவர் கூறியதால் அதை அதிகாரிகள் அனுமதித்தனர். ஆனால் அவரால் முழுமையாக நடந்து முடிக்க முடியவில்லை.
மொத்தம் 12 கர்ப்பிணிப் பெண்கள் இதுபோல ஓட முயன்று தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். கருவில் உள்ள குழந்தை குறித்து கவலைப்படாமல் காவலர் பணியில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்த அந்த 12 பேரும் பெரும் ஏமாற்றத்துடன், கண்ணீர் மல்க அங்கிருந்து வெளியேறினர்.
அடுத்த கட்டமாக எழுத்துத் தேர்வு 20ம் தேதியன்று நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications