ஆக. 15 முதல் சேலம் ரயில் கோட்டம்
சென்னை:சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் கோட்டம் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தொடங்கி வைக்கப்படும் என ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம் ரயில்வே கோட்டம் முழு வீச்சில் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன. அங்கு நிறுவப்பட வேண்டிய கட்டுப்பாட்டு அறை மற்றும் பிற தேவையான அலுவலகங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் ரெடியாகி விடும்.
புதிய கட்டடங்கள் கட்டும் பணி இன்னும் 2 ஆண்டுகளுக்குள் முடிவடைந்து விடும். புதிய கோட்டத்திற்கான அலுவலகம் கட்ட தேவையான இடத்தை ஒதுக்கித் தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.
புதிய கோட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள பணம் ஒரு தடை அல்ல. ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 3 கோடி பணம் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் சேலம் கோட்டம் முழுமையாக செயல்படும்.
தெற்கு ரயில்வே 2006-07ம் ஆண்டில் ரூ. 3100 கோடி அளவுக்கு பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மூலம் வருவாய் ஈட்டியுள்ளது.
பயணிகள் போக்குவரத்தின் மூலம் ரூ. 1649 கோடியும், சரக்குப் போக்குவரத்தின் மூலம் ரூ. 1190 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது என்றார் வேலு.












Click it and Unblock the Notifications