Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆள் கடத்தல்: மேலும் 3 எம்.பிக்களுக்குத் தொடர்புகைதான கத்தாராவின் பி.ஏ பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவதில் மேலும் 3 எம்.பிக்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும், இந்த வேலை கடந்த 1993ம் ஆண்டிலிருந்தே நடந்து வருவதாகவும் டெல்லியில் கைதான பாஜக எம்.பி பாபுபாய் கத்தாராவின் உதவியாளர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மனைவி மற்றும் மகன் ஆகியோரின் பாஸ்போர்ட்டில் வேறு பெண்ணையும் ஒரு பையனையும் கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற குஜராத் மாநில பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் பிடிபட்டார். 3 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாபுபாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதை சில வருடங்களாகவே அவர் செய்து வருவதாகவும், ஆள் கடத்தல் ஏஜென்டுகளுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் பாபுபாயின் உதவியாளர் ராஜேந்திர சிங் நேற்று கைது செய்யப்பட்டார். இவர்தான் பாபுபாயின் ஆள் கடத்தல் மோசடி வேலைகளுக்கு வலது கரம் போல செயல்பட்டவர்.

டிராவல் ஏஜென்டுளுக்கும், பாபுபாய்க்கும் இடையே பாலம் போல செயல்பட்டு வந்துள்ளார் சிங். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பலரை இதுபோல பாபுபாய் கடத்திச் செல்ல உதவியாக இருந்துள்ளார்.

இதேபோல ராஜேந்திர சிங்கின் தங்கை கிரண், டெல்லியில் பான் பீடா கடை நடத்தி வரும் சுரேந்தர் லால் யாதவ் ஆகியோரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இவர்களில் கிரணுக்கு முக்கிய வேலை தரப்பட்டுள்ளது. அதாவது பாபுபாயுடன் மனைவி வேடத்தில் செல்லும் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது இவரது வேலை. அதாவது குஜராத்திப் பெண்கள் போல எப்படி நடந்து கொள்வது, சேலை கட்டுவது, பேசுவது என்பது உள்ளிட்டவற்றை கிரண்தான் சொல்லிக் கொடுப்பாராம்.

சுரேந்தர் லால் யாதவும் இந்த ஆள் கடத்தல் வேலையில் முக்கியப் புள்ளி. இவர்தான் ராஜேந்தர் சிங்கிடம் ஆட்களைப் பிடித்துக் கொடுப்பவராம். ஏஜென்டுகள் பலருடனும் இந்த பீடாக் கடை யாதவுக்குத் தொடர்பு உள்ளதாம்.

யாதவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி. ராம்சொரூப் கோலி, உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. முகம்மது தகீர் கான், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான சந்திரசேகர் ராவ் ஆகியோரின் பெயர்களை யாதவும், ராஜேந்தர் சிங்கும் தெரிவித்துள்ளனர்.

யாதவ் உள்ளிட்ட கைதான 3 பேரையும் டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அங்கு யாதவ் அளித்த வாக்குமூலத்தில், இந்த மூன்று எம்.பிக்கள் தவிர மறைந்த எம்.பி. ராவ் அவத் ஆகியோரிடம், டிராவல் ஏஜென்டுகள் மகேஷ்குப்தா, ரஷீத் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தேன்.

எம்.பிக்களிடம் எங்களை அறிமுகம் செய்து வைக்குமாறு இரண்டு பேரும் கேட்டுக் கொண்டனர். இதற்காக ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை எனக்குக் கூலியாக கிடைத்தது. ஆனால் அவர்கள் டிராவல் ஏஜென்டுகள் என அப்போது எனக்கு தெரியாது.

முன்னாள் மத்திய அமைச்சரான சந்திரசேகர் ராவை, அவரது முன்னாள் செயலாளர் மந்திரமூர்த்தியின் மூலமாக ரஷீத்துக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

அதேபோல கட்டாராவிடம் ராஜேந்தர் சிங்கையும் நான்தான் அறிமுகப்படுத்தி வைத்தேன் என்றார்.

இதையடுத்து யாதவுக்கு 3 நாட்களும், ராஜேந்தர் சிங்குக்கு 5 நாட்களும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். கிரணுக்கு போலீஸ் காவல் மறுக்கப்பட்டு அவரை 10 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தங்களது கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் மீதான புகாரை தெலுங்கான கட்சி மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில சந்திரசேகர் ராவுக்கு சற்றும் தொடர்பு இல்லை. அதேபோல மந்திரமூர்த்தி என்ற பெயரிலும் யாரும் ராவிடம் வேலை பார்க்கவில்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, எம்.பிக்கள் மீதான இந்த பரபரப்பு புகார்கள் குறித்து நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அவர் கூறுகையில், இந்தப் புகார்கள் மிகவும் கடுமையானவை. இவை குறித்து 25ம் தேதி நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார் சாட்டர்ஜி.

அமெரிக்காவுக்கு 25 - அரபு நாடுகளுக்கு 5

ஒவ்வொரு நாட்டுக்கும் ஆட்களை சட்டவிரோதமாக கொண்டு போய் விடுவதற்கு விதம் விதமாக ரேட் நிர்ணயித்து வைத்துள்ளது இந்த டிராவல் ஏஜென்டுகள் மற்றும் எம்.பிக்கள் குழு.

அதன்படி அமெரிக்காவுக்கு கொண்டு போய் விடுவதற்குத்தான் அதிகபட்ச ரேட்டாம். அமெரிக்காவில் உள்ள எந்த நகருக்கும் கொண்டு போய் விடுவதற்கு ஒரு ஆளுக்கு ரூ. 25 லட்சம் வரை வாங்குகிறார்களாம்.

கனடா என்றால் 20 லட்சம் ரூபாயும், ரஷ்யாவுக்கு 7 லட்சமும், ஐரோப்பிய நாடுகளைப் பொருத்தவரை இங்கிலாந்து என்றால் 15 லட்சம், மற்ற நாடுகள் என்றால் 10 லட்சம் ரூபாய் பணம் வசூலிக்கின்றனர். அரபு நாடுகளுக்கு போக வேண்டும் என்றால் 5 லட்சம் கொடுத்தால் போதுமாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 900 பேர் வரை இவ்வாறு சட்டவிரோதமாக போயிருப்பதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+