பூணூல் அறுப்பு - பெரியார் சிலை உடைப்புதஞ்சை, திருவாரூரில் பரபரப்பு
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் 2 அர்ச்சகர்கள் தாக்கப்பட்டு அவர்களின் பூணூல்கள் அறுக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் பெரியார் சிலையின் தலையை சில விஷமிகள் துண்டித்ததால் பரபரப்பு நிலவுகிறது.
தஞ்சை பெரிய கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருபவர் வேம்பு அய்யர். இவர் நேற்று மதிய பூஜை முடிந்த பின்னர் தனது வீட்டுக்குக் கிளம்பினார்.
கோவிலுக்கு வெளியே அவர் வந்தபோது, 2 பேர் வேம்புவை வழிமறித்துத் தாக்கினர். பின்னர் அவரது பூணுலையும் அறுத்து எறிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் வாசலில் நின்றிருந்த போலீஸாரிடம் விரைந்து சென்று வேம்பு இதுகுறித்துப் புகார் செய்தார். உடனடியாக விரைந்த போலீஸார் பூணுலை அறுத்து வேம்புவைத் தாக்கிய திராவிட மணி, பிரபாகரன் ஆகிய இரு வாலிபர்களையும் கைது செய்தனர்.
இதேபோல, கரந்தை சன்னதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் ராமானுஜம் என்பவரை பூஜை முடிந்து வீடு திரும்பியபோது 3 பேர் வழிமறித்து தாக்கி, பூணூலை அறுத்து எறிந்து விட்டுத் தப்பினர். அவர்களைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.
பெரியார் சிலை தலை துண்டிப்பு:
இதற்கிடையே, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பெரியார் சிலையின் தலையை சில விஷமிகள் துண்டித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
முத்துப்பேட்டை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை உள்ளது. இந்த சிலையின் தலையை சில விஷமிகள் துண்டித்து சேதப்படுத்தினர். இந்தத் தகவல் பரவியதும், தி.க, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் அங்கு கூடினர்.
மதிமுகவை சேர்ந்த பழனிவேல் என்பவர் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார். இந்த சிலை கடந்த 1996ம் ஆண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவால் திறந்து வைக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டு இந்த சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மறுபடியும் தாக்குதல் நடத்தப்பட்டு இம்முறை தலை துண்டிக்கப்பட்டுள்ளது.
சிலையை அவமானப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
