தமிழக அரசு செம தூக்கம்-ராமதாஸ் புகார்:துரைமுருகன் மூலம் அரசு பதில்
வேலூர்: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை கண்டித்து பாமக சார்பில் வேலூரில் 5 நாள் தொடர் போராட்டம் நடந்தது.
கடைசி நாளான நேற்று போராட்டத்திற்கு ராமதாஸ் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடக மாநிலம் நந்தி துர்காவில் உற்பத்தியாகும் பாலாறு அம்மாநிலத்தில் 93 கி.மீ ஓடி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் 28 கி.மீ தூரத்தில் வந்து தமிழகத்தில் 222 கி.மீ தூரம் வருகிறது.
கர்நாடகா மாநிலம் பேத்தமங்கலத்தில் அம்மாநில அரசு பெரிய அணை கட்டிவிட்டது. இது தவிர 30 தடுப்பணைகள் கட்டியுள்ளது. ஆந்திர அரசு 22 தடுப்பணைகள் கட்டியுள்ளது. கணேசபுரத்தில் கட்டுவது 23வது அணை.
இது குறித்து தமிழக முதல்வர், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார்.
அவர் அனுப்பிய பதில் கடிதத்தில், சித்தூர் மாவட்டத்தில் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பஞ்சம், வறட்சி நிலவி வருகிறது. இதற்காக திட்டம் போடப்பட்டு அணை கட்டப்படுகிறது. இதன் மூலம் குப்பம் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். 4000 ஏக்கர் நிலம் பாசனம் பெறும்.
தமிழ்நாட்டிலிருந்து அமைச்சகர்கள் பொன்முடி, ஸ்டாலின் ஆகியோர் வந்திருந்தபோது இதுகுறித்து கூறியிருக்கிறேன். இந்த அணைகட்டும் திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது என கூறியுள்ளார்.
ஆந்திர அரசின் இந்த பதில் கடிதம் சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் மறைக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தை வெளியிடதாதது ஏன்?
4,000 ஏக்கர் பாசனம் எனக் கூறிவிட்டு, 17,500 ஏக்கர் பாசனத்திற்கு தகுந்த நீரை தேக்கும் அளவுக்கு அணை கட்ட திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 9 மாதங்களாக தமிழக அரசு பாலாறு அணை விஷயத்தில் என்ன செய்து கொண்டுள்ளது? வேலூர் மாவட்டத்தை சேர்ந்த துரைமுருகன் இப் பிரச்சனையில் அதிக ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லை ஏன்?
இப்பிரச்சனையில் தமிழக அரசு விழித்துக் கொள்ளாமல் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது.
முந்தைய அரசு பாலாறு அணை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அது என்ன ஆனது? தற்போது அரசு போட்ட வழக்கு என்ன ஆனது? பாலாறு அணை கட்டும் பிரச்சனைக்கு அமைச்சர் துரைமுருகன் முழு பொறுப்பேற்க வேண்டும்.
இதற்கு முந்தைய அரசும் பதில் சொல்ல வேண்டும். பாலாற்றில் கர்நாடகா, ஆந்திர அரசுகள் பல தடுப்பணைகள் கட்டியபோது தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தூங்கி கொண்டிருந்தன.
பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்த்து இன்னும் 5 நாட்களில் பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.
துரைமுருகன் மறுப்பு:
பாலாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் போக்கை, பாமக நிறுவனர் ராமதாஸ் குறை கூறியுள்ளதற்கு தமிழக பொதுபணித்துறை அமைச்சர் துரைமுருகன் மறுப்பு தெரிவி்த்துள்ளார்.
இந்த நிலையில் சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பாலாறு அணைப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சட்டரீதியான அனைத்து நடவடிக்ககைளயும் எடுத்து வருகிறது. எனவே இதுதொடர்பாக பாமக கூறும் புகார்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
பாலாறு அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் அளவில் பலமுறை ஆந்திர அரசுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 25ம் தேதி ஆந்திர அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே பாலாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
