பாயாசம் சாப்பிட்ட பெண்கள், குழந்தைகள் மயக்கம்
சென்னை:சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பாயாசம் சாப்பிட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 18 பேர் மயங்கி விழுந்தனர். 3 கர்ப்பிணிகளும் இதில் பாதிக்கப்பட்டனர்.
திருவல்லிக்கேணியில் உள்ள யாதவா மகா சபை பஜனை மண்டபத்தில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. 55 வயதாகும் இவர் மண்டபத்தில் வேலை பார்த்து வந்தார். கல்யாணம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் மண்டபத்தில் தயாரிக்கப்பட்டு மீதமாகும் சாப்பாடு உள்ளிட்டவற்றை அருகில் உள்ள குடிசைவாசிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பாராம்.
மேலும் பாயாசம் தயாரித்து அதையும் விற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை பால் பாயாசம் தயாரித்த விஜயலட்சுமி அதை மாட்டங்குப்பம் பகுதியில் உள்ள குடிசைவாசிகளுக்கு விற்றுள்ளார். அவர்களும் ஆவலோடு வாங்கி அருந்தியுள்ளனர்.
சிறிது நேரத்தில் பாயாசம் குடித்தவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அதிகம் பெண்கள் மற்றும் குழந்தைகள்தான் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள கோஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 11 பெண்களும், கோஷா மருத்துவமனையில் 7 பேரும் சேர்க்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் செண்பகவல்லி, அனிதா, செல்வி ஆகியோர் கர்ப்பிணிகள் ஆவர்.
பாயாசம் கெட்டுப் போனதாக இருந்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விஜயலட்சுமியைக் கைது செய்ய அவர் தங்கியிருந்த மண்டபத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.












Click it and Unblock the Notifications