வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:மதுரை தினகரன், சன் டிவி அலுவலகம் மீது வெறியாட்டம் நடத்தி, 3 உயிர்கள் பலியாக காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அமைச்சர்களில் சிறப்பாக செயல்படுபவர் யார் என்ற ஒரு கருத்துக் கணிப்பு கடந்த 7ம் தேதியன்று தினகரன் ஏட்டில், வெளிவந்ததைப் பார்த்து நான் மிகவும் வருந்தியதோடு ஓர் அறிக்கையையும் விட்டேன்.

மத்தியில் ஒரு கட்சியின் சார்பாக மட்டும் என்றில்லாமல், தோழமைக் கட்சிகளின் சார்பில் பலர் அமைச்சர்களாக இருந்து செயல்பட்டு வரும் நேரத்தில், கருத்துக் கணிப்பின் முடிவாக ஒருவரை மட்டுமே குறிப்பிட்டு வெளியிடுவதே தவறு என்கிறபோது, மற்ற அமைச்சர்களின் பெயரைப் போட்டு அவர்ளுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் ஆதரவு இருப்பதாக பத்திரிக்கையில் வெளியிடுவது விரும்பத்தகாத செயலாகும்.

அதை பிரதிபலிக்கும் வகையில் தான் நான் 7ம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த கருத்துக் கணிப்புகளில் எனக்கு எந்தக் காலத்திலும் நம்பிக்கை கிடையாதென்றும், அதை தற்போது இதற்காகக் கூறவில்லை. இதற்கு முன்பே பலமுறை தெரிவித்திருப்பதாகவும், கழகத் தோழர்கள் யாரும் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை பார்த்து விட்டு தோழமைக் கட்சகிளுக்கிடையே நட்புறவை பாதிக்கும் விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதோடு வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிவிக்கபப்ட்ட கணிப்பும் சரியான வரிசையில், அமைந்ததில்லை என்றும் தெரிவித்து அது அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது.

இந்த நிலையில் மீண்டும் அதே நாளேட்டில் வெளியிடப்பட்ட கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என்ற கேள்விக்குத் தரப்பட்ட பதில்களின் விளைவாக இன்றைய தினம் மூன்று விலைமதிக்க முடியாத வாலிபர்களின் உயிர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டன.

நாம் என்னதான் பேசினாலும், எழுதினாலும், போய் விட்ட அந்த உயிர்களை மீட்டுக் கொண்டு வர முடியாது. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலை எவ்வளவுதான் சொன்னாலும், சமாதானம் செய்ய முடியாது.

பணிக்குச் சென்று மாலையில், பத்திரமாக திரும்புவார்கள் என்ற எண்ணத்தோடு, சென்ற செல்வங்கள் மறைந்து விட்ட செய்தியினை யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும்.

எனவே நடைபெற்ற அந்த வன்முறை சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இவற்றுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படியான நடவடிக்கை இந்த அரசினால் எடுக்கப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிக்கை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக அந்த துறையைச் சேர்ந்த நண்பர்கள் எல்லாம் அதனை கண்டித்து அறிக்கை கொடுத்துள்ளனர். அவர்களின் உணர்வோடு நானும் ஒன்றுபடுகிறேன்.

எந்தப் பத்திரிக்கையாக இருந்தாலும், அதன் மீது தாக்குதல் நடத்துவதை ஜனநாயகத்தின் மீதும், பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள நான் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொண்டவன் இல்லை.

எனவே நடைபெற்ற செயலுக்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த சம்பவத்திலே உயிர் இழந்த குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி அளித்திட வேண்டும் என்று பத்திரிக்கையாளர்களின் சார்பில் தெரிவித்துள்ள கோரிக்கையை ஏற்று முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் வீதம் அளிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவைப் பொறுத்தவரையில், இது ஒரு ஜனநாயக அமைப்பு என்றும், வாரிசு அடிப்படையில், யாரும் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்றும் பலமுறை நான் தெரிவித்துள்ளேன். எனவே வாரிசு பிரச்சினை என்ற பெயரால் இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவித்திட யாரும் முயன்றிட வேண்டாமென்றும், அப்படியே முயன்றிட்டாலும் அதனை மனதில எடுத்துக் கொண்டு வன்முறை செயல்கள் உருவாக யாரும் வழி வகுத்திட வேண்டாம் என்றும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+