விரைவில் தென்மேற்கு பருவமழை
சென்னை:தமிழகத்தில் இந்த மாத இறுதியில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் வட கிழக்கு மற்றும் தென் மேற்கு என இரு பருவ மழைக் காலங்கள் உள்ளன. இதில் தென் மேற்குப் பருவ மழைதான் அதிக அளவு தண்ணீரைக் கொடுக்கும். நாடு முழுவதும் தென் மேற்கு பருவ மழைதான் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது.
அதேசமயம், தமிழகத்தைப் பொறுத்தவரை வட கிழக்குப் பருவமழைதான் அதிக தண்ணீரைக் கொடுக்கிறது. கேரளா மற்றும் கடலோர கர்நாடகம் ஆகிய பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை அதிக தண்ணீரைக் கொடுக்கும்.
கேரளாவில் வழக்கமாக தென் மேற்குப் பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்குவது வழக்கம். அதே நாளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் மழை தொடங்கும்.
இந்த ஆண்டு முன்கூட்டியே மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் தற்போது கேரளாவில் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே இந்தஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications