பி.இ. விண்ணப்ப விநியோகத்தில் குளறுபடி:மாணவர்கள் போராட்டம்- போலீஸ் தடியடி
சேலம்:சேலம், கரூரில் பி.இ. விண்ணப்ப விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடியால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
தமிழகம் முழுவதும் பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் விண்ணப்பங்களை வழங்குவதில் பெரும் குளறுபடிகள் இருப்பதால் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே விண்ணப்பங்களை வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்க வருவதால் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வெயில் அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடியாமல் மாணவர்கள் சோர்வடைந்து விடுகின்றனர்.
ஸ்டேட் பாங்க் மற்றும் கனரா வங்கி மூலமும் விண்ணப்பங்களைப் பெறலாம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல ஊர்களில் விண்ணப்பங்கள் சரிவர விநியோகிக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் இன்று சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பம் வாங்க குவிந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கல்லூரியின் கதவுகள் திறக்கப்படவில்லை. மேலும், விண்ணப்பம் போதிய அளவில் இல்லை என்றும் கூறப்பட்டது.
இதனால் மாணவர்கள் கோபமடைந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பெரும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி மாணவர்களைக் கலைத்தனர்.
இதேபோல கரூரில் ஸ்டேட் வங்கிக்கு விண்ணப்ப பாரங்களை வாங்கச் சென்ற மாணவர்களுக்கு போதிய அளவில் விண்ணப்பங்கள் ஸ்டாக் இல்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து வங்கி ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் சிலர் வங்கி மீது கல்வீசித் தாக்கினர். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர்.












Click it and Unblock the Notifications