கரூர்: வீட்டில் தனியாக இருந்த2 குழந்தைகள் கொடூர கொலை
கரூர்:கரூரில் வீட்டில் தனியாக இருந்த இரு குழந்தைகள் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்நகரில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கரூர், வடக்கு காந்தி கிராமம் , ஜி.ஆர்.வி நகரில் வசித்து வருபவர் கார்த்திகேயன். எல்.ஐ.சி. அதிகாரியான இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ராம் பிரகாஷ் (12), தீபிகா என்ற மகளும் உள்ளனர்.
ஜெயந்தி ஆசிரியையாக உள்ளார். ராம் பிரகாஷ் 7ம் வகுப்பும், தீபிகா 2ம் வகுப்பும் படித்து வந்தனர். விடுமுறை என்பதால் இரு குழந்தைளும் வீட்டில் இருந்தனர். தந்தையும், தாயும் வேலைக்குப் போய் விடுவார்கள் என்பதால் குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தனர்.
நேற்று பிற்பகல் கார்த்திகேயன் வீட்டுக்குப் பக்கத்து வீடுகளில் வசிக்கும் சில குழந்தைகள் ராம் பிரகாஷ், தீபிகாவுடன் விளையாட அவர்களது வீட்டுக்குச் சென்றனர். வீட்டின் கதவு திறந்து கிடந்ததால், அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராம் பிரகாஷும், தீபிகாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
இதைப் பார்த்து அந்தக் குழந்தைகள் பயந்து அலறி வெளியே ஓடி வந்து தங்களது வீடுகளில் தெரிவித்தனர். இதையடுத்து கார்த்திகேயன், ஜெயந்திக்குத் தகவல் போனது. போலீஸாருக்கும் தகவல் தரப்பட்டது.
வீட்டுக்கு விரைந்து வந்த பெற்ேறார், இரு குழந்தைகளும் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து கதறி அழுதனர். இரு குழந்தைகளும் கழுத்து அறுத்து கொடூரமாக கொல்லப்பட்டனர்.
போலீஸார் விரைந்து வந்து இரு உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் பொருட்கள், நகைகள் எதுவும் திருட்டுப் போகவில்லை. எனவே குழந்தைகளைக் கொல்ல வேண்டும் என்பது மட்டுமே குற்றவாளியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
கார்த்திகேயனுக்கு வேண்டாத யாரோ சிலர்தான் இந்த படு பாதகச் செயலை செய்திருக்க வேண்டும் எனவும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
பசுபதிபாளையம் போலீஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப் பகலில் இரு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications