குடும்பத்துடன் இணைந்த 11 மீனவர்கள்:கண்ணீர் மல்க குடும்பத்தினர் வரவேற்பு
நாகர்கோவில்:இலங்கையிலிருந்து மீண்டு தமிழகம் திரும்பிய குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் நேற்று தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். அவர்களை கண்ணீர் மல்க குடும்பத்தினர் வரவேற்றனர்.
விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு 68 நாட்கள் சிறை வைக்கப்பட்டு மீண்டுள்ள 11 குமரி மாவட்ட மீனவர்களும் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் அருகே விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து சனிக்கிழமை சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட அவர்கள் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.
பின்னர் டிஜிபி அலுவலகத்தில் வைத்து தாங்கள் கடத்தப்பட்டது எப்படி என்பது குறித்து விவரித்தனர். இதையடுத்து அவர்களை சொந்த ஊர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசு அனுப்பி வைத்தது.
தாங்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட போலீஸ் வேனிலேயே சொந்த ஊர்களுக்கு மீனவர்கள் பயணப்பட்டனர். அவர்களை வரவேற்க சொந்த ஊர்களான கோடிமுனை, கொட்டில்பாடு ஆகிய ஊர்களில் பிரமாண்ட வரவேற்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வரவேற்பு தோரணங்கள் கட்டப்பட்டும், பட்டாசுகள் வெடித்தும் மீண்ட மீனவர்களை கிராமத்தினர் வரவேற்றனர். முதலில் கொட்டில்பாடு கிராமத்திற்கு வேன் சென்றது. அங்கு ஜேசுதாசன், ஆல்பர்ட், பிராங்க்ளின் ஆகியோர் இறங்கிக் கொண்டனர்.
அவர்களை உறவினர்கள் கட்டிப் பிடித்தும், கதறி அழுதும் வரவேற்றனர். பின்னர் 3 பேரையும் அங்குள்ள சர்ச்சுக்ககுக் கொண்டு சென்றனர். அங்கு நன்றி வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் 3 பேரையும் பாதிரியார் சேவியர் ராஜ் சாம் ஆசிர்வதித்தார். பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்றனர்.
தொடரந்து கோடிமுனைக்கு வேன் சென்று. ஆனால் அதற்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே ஊரே திரண்டு நின்றிருந்தது. இதனால் சைமன் காலனி என்ற அந்த இடத்திலேயே ததேயூஸ், தீபக், அனிஸ்டன், கிளமென்ட்ஸ், கிங்ஸ்லி, ஜேம்ஸ் ஆகியோர் இறங்கிக் கொண்டனர்.
அவர்களை உற்றார், உறவினர் கண்ணீரும், கம்பலையுமாக வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்தும், 7 பேரையும் தூக்கிக் கொண்டும் கோடிமுனைக்கு சென்றனர்.
அனைவரையும் தோளில் சுமந்தபடி சென்றது உணர்ச்சிகரமாக இருந்தது. சிறுவன் அனிஸ்டனை அவரது தந்தையும், தாயும் தூக்கிக்கொண்டு மாறி மாறி முத்தமிட்டு உச்சி முகர்ந்து கதறி அழுதது நெகிழ்ச்சி தருவதாக இருந்தது.
மீனவர்கள் மீண்டும் வந்து சேர்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எல்.ஏ ஜெயபால் கூறுகையில், அனிஸ்டனுக்கு 14 வயதுதான் ஆகிறது. அவனை இனிமேல் மீன் பிடிக்க அனுப்பக் கூடாது. அவனை பள்ளியில் சேர்க்க வேண்டும். அவனது படிப்புக்கான முழுச் செலவுகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
மீனவர்கள் மீண்டும் தங்களது குடும்பங்களில் சேர்ந்த நிகழ்ச்சி, பெரும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications