பிஇ கவுன்சிலிங்: சென்னை, மதுரை, கோவை,திருச்சியில் நடத்த ஜெ. கோரிக்கை
சென்னை:என்ஜினீயரிங படிப்புக்கான கலந்தாய்வு கூட்டத்தை சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவடங்களிலும் நடத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை வழங்குவதிதல் அண்ணா பல்கலைக்கழகம் போதுமான ஏற்பாடுகள் செய்யாததால் கொளுத்தும் வெயிலில் மாணவ, மாணவிகள் பல மணி நேரம் காத்துக்கிடந்து பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றின் மூலமான விணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தாலும், அவ்வங்கிகளின் சில கிளைகளில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
அக்கிளைகளிலும் சில மணி நேரங்களில் விண்ணப்பங்கள் விற்று விட்டதாக அதிகாரிகள் அறிவிக்கின்றனர். இதனால் வெயிலில் வாடிய மாணவ, மாணவிகள் செய்வதறியாமல் திகைக்கின்றனர். அண்ணா பல்கலைகழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் பெற வரிசையில் காத்திருந்த நேரத்தில் இரண்டு கவுண்டர்களில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
சேலத்தில் விண்ணப்பங்களை பெறுவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவை சமாளிக்க போலீஸார் தடியடி நடத்தியதில் பல மாணவ, மாணவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பெற்ற மாணவ, மாணவியர் சிலருக்கு கல்லூரிகளின் விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படவில்லை.
தமிழகம் முழுவதும் இதே பிரச்சனைதான் காணப்படுகிறது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு செயலாற்றும் திறனை இழந்துவிட்டது.
மே 14ம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவரும் என்பதும், முடிவுகள் வெளிவந்தவுடன் பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதும் அரசுக்கு முன்கூட்டியே தெரிந்தும் அதற்கான நடவடிக்கை எடுக்க செயல் கண்டனத்திற்குரியது.
இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டத்தில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கும் அலைச்சலும், செலவும் அதிகமாகும்.
எனது ஆட்சி காலத்தில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு இடங்களில் கலந்தாய்வு நடைபெற்றது. அதே போல இப்போதும் மேலே குறிப்பிட்ட நான்கு இடங்களிலும் கலந்தாய்வு நடைபெற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications