பி.இ. கவுன்சிலிங்-அரசு தரும் கட்டண சலுகை
சென்னை: பி.இ. கவுன்சிலிங்குக்காக சென்னைக்கு வரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடைபெறும். ஒரே இடத்தில் நடந்தால் மட்டுமே கலந்தாய்வை விரைவில் முடிக்க முடியும்.
எந்தெதந்த தேதிகளில் கலந்தாய்வுக்கு வர வேண்டும் என்பது மாணவர்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு விடும். எனவே அவர்கள் சென்னையில் பல நாட்களுக்குத் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தினசரி 2,000 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கும்.
ஒன்றுக்கு அதிகமான இடங்களில் கவுன்சிலிங் நடத்தவேண்டும் என கோரிக்கை வந்தால் பரிசீலிக்கப்படும்.
சென்னைக்கு கலந்தாய்வுக்காக வரும் மாணவர்களுக்கும், அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கும் பேருந்து கட்டணத்தில் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள மனு செய்து விட்டு பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் வந்தால், மீண்டும் மருத்துவக் கலந்தாய்வுக்குப் போக மாட்டேன் என எழுதிக் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான பொறியியல் இடங்கள் உள்ளன. எனவே மனு செய்த அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் பொன்முடி.












Click it and Unblock the Notifications