கொடநாடு எஸ்டேட்டில் புகுந்த போலீஸ்அதிரடி சோதனை - அதிமுகவினர் கைது
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்குள் நேற்று போலீஸ் படையின் உதவியுடன், அரசு அதிகாரிகள் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மில்லர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
கோத்தகிரி அருகே உள்ளது கொட நாடு எஸ்டேட். இந்த எஸ்டேட்டை ஜெயலலிதா பினாமி பெயரில வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எஸ்டேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
![]() |
இதுதொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்று கோத்தகிரி ஒன்றிய தலைவர் ராஜு என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு அனுப்பினார். இதையடுத்து சமீபத்தில் இந்த எஸ்டேட்டில் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் ஓய்வுக்காக வந்து தங்கியிருந்தபோது, அங்கு ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே நுழைய அதிமுகவினர் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் கொடநாடு எஸ்டேட்டைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டனர். நேற்று காலை அதிரடிப்படை போலீஸார், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், பெண் போலீஸார் ஆகியோர் கொட நாடு எஸ்டேட் முன்பு குவிக்கப்பட்டனர். வஜ்ரா வாகனமும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரும், அதிகாரிகளும் உள்ளே வரக் கூடாது என்று கூறி எஸ்டேட்டில் வேலை பார்த்து வரும் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நுழைவாயில் முன்பு கூடி தடுத்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைய மறுத்தனர்.
இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் எஸ்பி வித்யா குல்கர்னி, உதவி கலெக்டர் சமயமூர்த்தி, ஆர்.டி.ஓ, வருவாய் ஆய்வாளர், கொடநாடு ஊராட்சித் தலைவர் பொன்தோஸ் உள்ளிட்டோர் உள்ளே நுழைந்து சென்றனர்.
ஆனால் உள்ளே இருந்த 2வது நுழைவாயில் மூடப்பட்டிருந்தது. உரிய சோதனைக் கடிதத்தைக் காட்டினால் உள்ளே அனுமதிப்பதாக எஸ்டேட் பொது மேலாளர் ரவிச்சந்திரன் கூறினார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள், கல்லை எடுத்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அப்போது அங்கு வந்த அதிமுக வக்கீல்கள் அதிகாரிகளைச் சூழ்ந்து கொண்டு அனுமதிக் கடிதம் இல்லாமல் எப்படி நுழையலாம் என்று ஆவேசமாக கேட்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். பின்னர் உள்ளே சென்று நில ஆய்வில் ஈடுபட்டனர்.
எஸ்டேட்டிற்குள் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை நில அளவையாளர்கள் அளந்து பார்த்தனர். புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தையும் அளந்து பார்த்தனர். முழுமையாக ஆய்வுகளை முடித்துக் கொண்ட பின்னர் அங்கிருந்து அதிகாரிகள் சென்றனர்.
காவல்துறையினரின் உதவியுடன் அதிகாரிகள் நடத்திய இந்த ஆய்வால் கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சோதனை நடந்து கொண்டிருந்தபோது ஆங்காங்கே அதிமுகவினர் மறியல் செய்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். முன்னாள் அமைச்சர் மில்லர், திரளான அதிமுகவினருடன் கொடநாடு எஸ்டேட்டுக்குக் கிளம்பினார். அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.













Click it and Unblock the Notifications