அதிமுக அலுவலகம் இடிப்பு: தெரியாமல்அனுப்பப்பட்ட நோட்டீஸ் - கருணாநிதி
சென்னை:விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருப்பது தெரியாமல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், அதிமுக அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தை இடிக்க அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் அறிவாலயத்திற்கும் இதே கதிதான் நேரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் புகாருக்கு நேற்று இரவு நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பதிலளித்தார். கருணாநிதியின் 84வது பிறந்த நாளையொட்டி கிண்டி ஹால்டா சந்திப்பு அருகே பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், இன்று மாலை பத்திரிக்கைகளிலே வந்த செய்தி ஒன்றைச் சொல்லியாக வேண்டும்.
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலே ஒரு தீர்ப்பு வந்துள்ளது. அதாவது சென்னை போன்ற பெருநகரங்களில் அளவுக்கு மீறி உயரமாக கட்டப்பட்ட, எல்லையற்ற வகையில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்துத் தள்ள வேண்டும் என்பதாகும்.
இதுதொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை உயர்நீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழுவின் கட்டளைப்படி தான் கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன.
இந்த அடிப்படையில், சென்னையில் உள்ள பல கட்டடங்களை இடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருப்பதை எண்ணிப் பார்த்து நமது ஆட்சி அமைச்சரவை கடந்த வாரம் 26ம் தேதி கூடி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
நீதிமன்றத்தின் உத்தரவால் ஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான வீடுகளை இடித்துத் தள்ள வேண்டிய சூழ்நிலையும், அதனால் அந்தப் பகுதி மக்களிடத்தில் தேவையற்ற பீதியும் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த பீதியைப் போக்கவும், மக்கள் கஷ்டப்பட்டு கட்டிய கட்டடங்களை காப்பாற்ற நியாயமான காரணங்கள் இருக்கின்றதா என்பதை ஆராயவும், நாமே ஒரு குழு அமைத்து அந்தக் குழு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, 26ம் தேதி அமைச்சரவையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினோம்.
இந்த நிலையில் 27ம் தேதி சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு மறு ஆய்வு கமிட்டி போட்டு ஆராய்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தெரியவில்லையோ என்னவோ, மறு ஆய்வு செய்கிறார்கள்.
ஒரு 30 வீடுகளுக்கு நீங்கள் விதியை மீறிக் கட்டியிருக்கிறீர்கள், என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். அதில் தப்பித் தவிறி ஜெயலலிதா கட்சி அலுவலகமும் ஒன்று.
உடனே அம்மையார் துள்ளிக் குதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதைத் தொட்டால் பார், திமுகவை அழித்தே தீருவேன் என்கிறார்.
நீதிமன்றத்திற்கும், அவர்களுக்கும்தான் விவாதம். நாங்கள் இதில் போனால் போவுது பாவம் என்று இடையிலே நுழைந்து கமிட்டி போட்டு ஆய்வு செய்து, நாங்களே உச்சநீதிமன்றத்திற்கு முறையீடு செய்து, அவர்களைக் காப்பாற்றுங்கள், அந்த வீடுகளை இடிக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்யலாம் என்று இருந்தால் எங்கள் மீது பாய்கிறார்கள்.
நாங்கள் பரிந்துரைதான் செய்கிறோம், இடித்துரை செய்யவில்லை. இடித்துத் தள்ளு என்று கூறவில்லை. அந்த வேலை எங்களுக்கு பிடிக்கவும் பிடிக்காது.
கொடநாடு உச்சியிலே 50 கோடியில் வீடு கட்டியிருக்கிறார்கள். அது என்ன என்று கேட்டால், ஜெயலலிதா அது எனது வீடு இல்லை என்கிறார். தொட்டால், தொடக் கூடாது என்கிறார் - வீட்டைத்தான் சொல்கிறேன். உனது வீடுதான் இல்லையே பிறகு ஏன் தொடக் கூடாது என்கிறாய் என்று கேட்காமல் இருக்க முடியுமா.
இன்று கொடநாடு ஒன்றியக் கூட்டத்தைக் கூட்ட முடியவில்லை. இந்த அம்மா அல்லது அவரது பினாமிகள் சேர்ந்து 50 கோடியில், 800 ஏக்கரில் மாளிகை கட்டியிருக்கிறார்கள். அந்தப் பக்கமாக நாங்கள் யாரும் போக முடியவில்லை. அரசு இருக்கிறதா, இல்லையா. விதிமுறையை மீறி மலைப் பகுதியில் வீடு கட்டியிருப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது அரசா என்று அந்த ஒன்றியத் தலைவர் அரசுக்குக் கடிதம் எழுதினார்.
அதுகுறித்துப் பார்க்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கூறினோம். அவரும் சென்றார். உள்ளே வராதே என்று ஜெயலலிதா அம்மையார் கூட்டத்தார் ஆட்சியர் உள்ளிட்டவர்களை விரட்டி விட்டனர். சரி போலீஸுடன் போனோம். இப்போது எனது வீடே அல்ல என்கிறார் ஜெயலலிதா.
எனவே, கொடுக்கப்பட்ட நோட்டீஸ் திமுக அரசு கொடுத்த நோட்டீஸ் அல்ல, உயர்நீதின்ற உத்தரவின்படி அளிக்கப்பட்ட நோட்டீஸ். அதற்கும் இடையில், அவசரப்பட்டு எந்த வீட்டையும் இடிக்கக் கூடாது என்பதற்காக ஒரு குழுவை நியமித்துள்ளோம். அந்தக் குழுவின் வேலையும் தொடங்கி விட்டது.
நியாயப்படிதான் எல்லாம் நடக்கும். அநியாயம் எதுவும் நடக்காது. இந்த உறுதியை அவர்களுக்கு மட்டுமல்ல, நம்முடைய பொதுமக்களுக்குச் சொல்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications