வீரப்ப மொய்லி மீது கிருஷ்ணசாமி பாய்ச்சல்!
சென்னை:தமிழக காங்கிரஸ் கட்சியில், ஜி.கே.வாசனுக்கு ஆதரவாக, ஒரு தலைபட்சமாக, வீரப்பமொய்லி செயல்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கடுமையாக முயன்றார் கிருஷ்ணசாமி. ஆனால் அவர் உள்ளிட்ட அனைவரின் முயற்சிகளையும் முறியடித்து, ஜி.கே.வாசன் ஆதரவாளரான பி.எஸ்.ஞானதேசிகன், மீண்டும் சீட் வாங்கி விட்டார்.
இதனால் கிருஷ்ணசாமி கடும் கொதிப்படைந்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக டெல்லியில் கூறி வருகிறார். அவருக்கு ஆதரவாக கடலூர், சென்னையில், தலா 5 பேர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தான் பதவி விலகப் போவதில்லை என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேச்சை நாங்கள் தட்ட மாட்டோம். அவரது முடிவை ஏற்போம். மறுக்க மாட்டோம்.
ஆனால், தமிழக காங்கிரஸ் விவகாரத்தைக் கவனித்து வரும் வீரப்ப மொய்லி பாரபட்சமாக, ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். ஜி.கே.வாசனுக்கு மட்டுமே அவர் ஆதரவாக இருக்கிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இப்படி இருந்தால் எப்படி சோனியாவின் கரத்தை வலுப்படுத்த முடியும்.
கட்சிக்காக, சோனியா காந்திக்காக உழைப்பவர்களுக்கு மனச் சோர்வு ஏற்பட்டுள்ளது, சோதனை வந்துள்ளது. இதுகுறித்து சோனியா காந்தியிடம் விளக்கவுள்ளேன் என்றார் கிருஷ்ணசாமி.
இன்று சோனியாவை சந்திக்க கிருஷ்ணசாமி முயற்சித்து வருகிறார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications