எம்.கே.நாராயணன் ஒரு உளவாளி- ஜே.வி.பி கடும் தாக்கு
கொழும்பு:இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஒரு முன்னாள் உளவாளி. இலங்கையின் நலனுக்கு எதிராக அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்று சிங்கள இனவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுணா குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு ஜே.வி.பி. கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதில், இலங்கையை பிளவுபடுத்த நினைக்கும் சக்திகளுக்கு முன்பு இந்தியா பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வந்தது. அப்போது கடைப்பிடித்த அதே வெளியுறவுக் கொள்கையை இப்போதும் கடைப்பிடிக்க இந்தியா முயல்வது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
1987ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை இந்திய புலனாய்வுப் பிரிவான ஐ.பிக்குத் தலைமை தாங்கியவர் நாராயணன். அந்த சமயத்தில் இலங்கையில் செயல்பட்டு வந்த போராளிகள் அமைப்புகளுக்கு இந்தியா ஆயுத உதவி, பயிற்சி உள்ளிட்டவற்றை ரகசியமாக செய்து வந்தது.
இதன் மூலம் இலங்கைக்குள் ரகசிய ஊடுறுவலை இந்தியா மேற்கொண்டிருந்தது. இலங்கைக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டு செயல்படுத்தியவர் எம்.கே.நாராயணன் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் வான் பலத்தை சமாளிக்க முடியாமல் திணறி வரும் இலங்கை, இந்தியாவிடம் ஆயுத உதவிகளையும், ஏவுகணை உதவிகளையும் கோரி வருகிறது.
சமீபத்தில் ராஜபக்ஷேவின் தம்பியும், இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்ஷே இது தொடர்பாக டெல்லிக்கு ரகசிய பயணம் மேற்ெகாண்டு நாராயணன் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார்.
ஆனால் தமிழகத்தில் நிலவும் எதிர்ப்பு காரணமாக இலங்கையின் கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது. மேலும், பாகிஸ்தான் அல்லது சீனாவிடம் எந்தவிதமான ஆயுத உதவியையும் இலங்கை பெறக் கூடாது எனவும் இந்தியா எச்சரித்தது.
ஆனால் இந்தியாவின் எச்சரிக்கையைப் புறக்கணித்த இலங்கை, சீனாவைச் சேர்ந்த ஆயுத நிறுவனத்திடம் புதிய ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந் நிலையில் ஜே.வி.பியின் காட்டமான கடிதம் வெளியாகியுள்ளது.
ஜே.வி.பி. தனது கடிதத்தில் மேலும் கூறுகையில், இலங்கை ஒரு சுதந்திரமான நாடு. யாரிடமும் வர்த்தகம் செய்யும் உரிமை இலங்கைக்கு உள்ளது. ஆயுதங்களை வாங்குவதிலும் இலங்கையை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.
இலங்கை அரசுக்கு ஆதரவாக நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோர் செயல்பட்டு வருவதாக தமிழக கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் நாராயணன் மீது சிங்கள கட்சி பாய்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications